நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத்தொகை.
சங்க காலத்தில் எழுதப்பட்ட தொகை நூல்களில் ஒன்று குறுந்தொகை. கடவுள் வாழ்த்துப் பாடலுடன் சேர்த்து 401 பாடல்கள் கொண்ட இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ. ‘ஆசிரியப்பா’ இலக்கணத்தைக் கொண்டு எழுதப்பட்ட பாடல்களின் அடியளவினால் குறுந்தொகை என்று அழைக்கப்படுகிறது.
400 அகப்பாடல்களின் தொகுப்பான இந்நூலுக்கு ‘நல்ல குறுந்தொகை’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. அகப்பாடல்கள் என்பவை காதலைச் சொல்லும் பாடல்கள். காதல், காதலர்கள், வாழ்ந்த காலச்சூழல், இயற்கை வளம் என்பவற்றோடு சுவைபடக் காதல் வாழ்வைச் சொல்வது குறுந்தொகை.
கதை கேட்பது அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்று. அதிலும் காதல் கதை, பல ஆயிரம் முன்னர் நம் முன்னோர்கள் காதலித்த கதை என்றால் ஆர்வமும், ஆசையும் அதிகமாகத்தான் இருக்கும்.
வேகமான வாழ்க்கைப் பயணத்தில் அன்று எழுதிய பாடல்களைப் படிக்கவும், அப்படிப் படித்தாலும் பொருளைப் புரிந்து கொள்ளப் போதுமான நேரம் அனைவருக்கும் இல்லை என்பது தான் உண்மை. அப்படிப்பட்டவர்கள் சங்க இலக்கியப் பாடல்களை அறிந்து கொள்ளவும், காதலைக் கொண்டாடி மகிழ்ந்திடவும் வேண்டும் என்பதன் நோக்கமே இந்தச் ‘சங்கம் மொழிந்த காதல்’.
-சித்ரா மகேஷ்