‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5
மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று மொழி. மொழியின் வழி தன் உணர்வைச் சொல்லும் பொழுது மிகவும் அழகானது; உணர்வைக் கொல்லும் பொழுது அதிக ஆபத்தானது சொல். “ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்” என்பதற்கேற்பச் சொல் வலிமையும், ஆற்றலும் நிறைந்தது. பல வரலாற்றுப் புரட்சிகளும், மாற்றங்களும் நிகழக் காரணமாக இருந்ததும் அதுவே. இந்தியச் சுதந்திரப் போராட்ட உணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்ததில் பேச்சும், எழுத்தும் முக்கியமானவை. அப்படிப்பட்ட திறன்மிகு சொற்களைக் கொண்டே உலகம் இயங்கி வருகிறது.
மனிதனுக்குள் அவமானத்தைத் துளையிட்டு நுழைக்கிற கருவி சொற்களின்றி வேறில்லை (சு.வெங்கடேசன்). மனித இனத்தை அப்படியொரு சொல் பிரிவுபடுத்தியதோடு, இல்லாத, யாரும் சொல்லாத பொருள் அதன்மேல் ஏற்றப்பட்டு வேற்றுமை நிலையை உருவாக்கியுள்ளது. ஒரு சொல் பிறந்து, வளர்ந்த கதையை மறைத்து, மறந்துவிட்டு பிறிதொருவரைப் புண்படுத்தும்படி மாற்றுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்தச் சொல் ”சேரி”. சேரி என்பதன் பொருள் மக்கள் சேர்ந்து வாழும் இடம், தெரு, குடியிருப்பு, சிற்றூர் என்பதே. சங்க காலத்தில் மக்கள் கூடி வாழும் இடத்தையே சேரி என்றனர். ”எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் அமைத்த நம் தமிழ்மொழியில் சேரி என்ற சொல்லுக்கு, இன்றைய நாளில் சொல்லப்பட்டு வரும் பொருள் ஈடுசெய்ய முடியாத இழுக்காகும்.
மேலும் பலகுடி சேர்ந்தது சேரி, பல பொருள் தொக்கது தோட்டம் {தொல்-சொல்49) என்று விளக்கம் தருகிறது தொல்காப்பியம். அன்றைய காலத்தில் ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த இடம் குடி, தெரு அல்லது சேரி என்றழைக்கப்பட்டது. பட்டினம், பாக்கம், சேரி, குடி, ஊர், தெரு, மறுகு, நகர், பாடி, இருக்கை, பதி…என்று மனிதன் வாழுமிடங்கள் பற்றிய பெயர்கள் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது. பாணர்கள் வாழ்ந்த இடம் பாண்சேரி/பாணச்சேரி, பார்ப்பனர்கள் வாழ்ந்த இடம் பார்ப்பனச்சேரி, உப்பு வணிகர்கள் வாழ்ந்த பகுதி உமண்சேரி, என தொழில் அல்லது குழுக்களின் பெயரோடு சேர்த்தே சேரி என்ற சொல் வழங்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி, ஆலஞ்சேரி, மேச்சேரி, மட்டாஞ்சேரி (கேரளா) என்ற ஊர்களைக் கொள்ளலாம். இக்குறுந்தொகைப் பாடலில் இடம்பெறும் சேரி என்னும் சொல் தலைவி வாழுமிடத்தைக் குறிக்கிறது. பல சேரிகள் சேர்ந்தது ஊராகக் கூட இருந்திருக்கலாம்.
காதலில் ஊடல் வரும்போது நண்பர்கள் துணையாக நின்று சொல்வது, ‘இனிமேல் எங்க ஏரியாப் பொண்ணப் பார்த்த, அவ்வளவுதான், எங்க தெருப் பொண்ணுகூட உனக்கு என்ன பேச்சு, அவளுக்கு உன் கூடப் பேசப் பிடிக்கலை, அவளைப் பொண்ணுப் பார்க்க வரப் போறாங்க, அத்தை மகனுடன் திருமணம் உறுதியாயிடுச்சு, வெளிநாட்டுக்குப் படிக்கப்போறேன்/ இப்படியெல்லாம் பலவற்றைத் தாண்டித்தான் காதலிக்க முடியும். எல்லாம் தாண்டிக் காதலித்தாலும், பிரிவு வரும்போது நடக்கும் பெரியதொரு நாடகப் போராட்டம். மறக்க முடியாது, பிரிந்து வாழ முடியாது எனத் தெரிந்தும் சூழ்நிலை காரணமாகப் பிரியும்போது நினைவு கொல்லும், உயிர் வலிக்கும்.
“ஏண்டி சூடாமணி காதல் வலியைப் பார்த்ததுண்டோடீ” எனும் எளிய சொற்களில் சொல்லும் உணர்வும், வலியும் ஆழமானது. காதல் கொண்டால்தான் அதன் சுவை, இன்பம் தெரியும். அதே போல் காதலில் பிரிவு என்பதையும் நாம் உணர்ந்தால் மட்டுமே உணரமுடியும். வலி என்பது உணர்ச்சி, அதைப் பார்த்தது உண்டா? காதல் பிரிவுதரும் வலியைப் பார்த்தவர் உண்டா? விடை யார் சொல்ல முடியும். காதலர்களைத் தவிர..
தலைவியின் காதலை முழுமையாக அறிந்தவள் தோழி மட்டுமே. அனுபவம் புதுமை….என்று பரத்தை அல்லது இன்னொரு பெண்ணின் அழகிலும் அன்பிலும் மயங்கித் தலைவியை நினைக்காது தலைவன் பிரிந்துச் சென்ற நாளில் இருந்து, உண்ணாது, உறங்காது அவள்படும் துன்பத்தைக் கண்டு உடனிருந்தும் தேற்ற முடியாது தவித்தவளும் தோழியே. தலைவன் தலைவியைக் காண வருகிறேன் என்று தோழியிடம் சொல்கிறான். அதற்கு மறுமொழியாகத் தோழி, உன்னைப் பிரிந்ததன் காரணமாக உணவு, உறக்கமின்றி துன்புற்றதால் தலைவி தன் அழகினை இழந்து தோற்றம் மாறி நிற்கிறாள். முன்னர் நீ பார்த்ததுபோல் இல்லை அவள் அழகு. வேண்டும் பொழுது வந்து செல்வது முறையல்ல, நீ அந்தப் பெண்ணுடனேயே இருந்துகொள் என்று, தலைவியிடம் திரும்பி வருவதாகச் சொல்லும் தலைவனிடம் தலைவியின் காதலை உணர்த்தவும், இதுபோல் அவன் மீண்டும் பிரிந்து செல்லாமலிருக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேசுவதாகவே இப்பாடல் அமைகிறது.
குறுந்தொகைப் பாடல்
வாரல் எம்சேரி தாரல்நின் தாரே
அலர் ஆகின்றால் பெரும காவிரிப்
பலர் ஆடு பெருந்துறை மருதொடு பிணித்த
ஏந்துகோட்டு யானைச் சேந்தன் தந்தை,
அரியலம் புகவின் அம்தோட்டு வேட்டை
நிரைய ஒள்வாள் இளையர் பெருமகன்
அழிசி ஆர்க்காடு அன்ன இவள்
பழிதீர் மாண்நலம் தொலைதல் கண்டே. (258)
எழுதியவர் – பரணர்
திணை – மருதத்திணை
துறை – தலைவியைப் பிரிந்து பரத்தை/ வேறொரு பெண்ணுடன் வாழ்ந்திருந்த தலைவன், தலைவியைக் காண வருவதாகச் சொன்னதற்குத் தோழி, உனைப் பிரிந்த துன்பத்தைனால் தன் அழகையிழந்து நிற்கிறாள்; எனவே உனக்கு எந்தப் பயனும் இல்லை. நீ எம் சேரிக்கு வரவேண்டாம் என்று வாயில் மறுத்துக் கூறியது. கூறியது.
அருஞ்சொற்பொருள்
வாரல் – வருவதை நிறுத்து/ வரவேண்டாம்
எம்சேரி – எமது ஊர், தெரு, குடியிருப்பு
தாரல்நின் தாரே – உன் மாலையைத் தரவேண்டாம் (நின் தார் தாரல் – நின் – உன், தார் – மாலை, தாரல் – தர வேண்டாம்)
அலர் ஆகின்றால் – காதலர்களைப் பற்றி ஊரார், உறவினர், சுற்றத்தார் பழி சொல்லிப் பேசுவது
பெரும காவிரி – காவிரி ஆறு
பலர் ஆடு பெருந்துறை – பலர் நீராடுகின்ற காவிரியின் கரைப்பகுதி (துறை- கடற்கரை, ஆற்றின் கரை, குளத்தின் கரை)
மருதொடு – மருதமரத்தோடு
பிணித்த – கட்டிய
ஏந்துகோட்டு யானை – மேலுயர்ந்தவாறு இருக்கும் தந்தத்தை உடைய யானை (ஏந்து – மேலுயர்ந்த, கோட்டு – தந்தம்)
சேந்தன் தந்தை – சேந்தனுடைய தந்தை
அரியலம் புகவின் – கள்ளாகிய உணவு (அரியல் – கள், புகவு – உணவு) அம்தோட்டு வேட்டை- அழகிய விலங்குக் கூட்டத்தை வேட்டையாடும் (அம் – அழகு, தோட்டு- கூட்டத்தை)
நிரைய ஒள்வாள் – நரக வாழ்வைப் போன்ற துன்பத்தைத் தரகூடிய ஒளி பொருந்திய வாள்
இளையர் பெருமகன் – இளைய வீரர்களின் தலைவன்/தலைமகன்
அழிசி – ஆர்க்காட்டின் குறுநில மன்னன் அழிசி (சேந்தனின் தந்தை) ஆர்க்காடு – சோழநாட்டில் உள்ள ஆர்க்காடு, (இன்னொரு பொருள்) ஆர் – ஆத்தி மரம். ஆத்திமரங்கள் நிறைந்த காடு.
அன்ன இவள் – இணையான அழகை/இயல்பை உடைய இவள்
பழிதீர் – குறை இல்லாத
மாண் – மாட்சிமை/பெருமை
நலம் – அழகு
தொலைதல் – அழிதல் கண்டு
பாடலின் பொருள்
சங்கப் பாடல்களில் காதலைச் சொல்லும் இடங்களில் இயற்கை வளங்கள் பாடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒரு நாட்டின் வளத்தை சில சொற்களைக் கையாண்டு சொல்லியுள்ளது பெரும் சிறப்பு. மேலும் தலைவியின் அழகை நாட்டு வளத்துடன் ஒப்பிட்டுக் கூறிப் பெண்மையைப் போற்றி ஒருநாட்டின் வளத்தோடும், சிறப்போடும் இணைத்துப் பார்த்த பரணர் உள்ளம் வாழ்த்துவோம்.
நாட்டில் உள்ள மக்கள் பலரும் வந்து நீராடுகின்ற பெரிய துறையை உடைய காவிரியாற்றின் கரையில் மருத மரங்கள் செழித்து வளர்ந்திருக்கிறது. அதில் கட்டப்பட்டிருக்கும் மேல்நோக்கி உயர்ந்துள்ள தந்தங்களைக் கொண்ட யானைகளைக் கொண்டவன் சேந்தன். இனிய சுவையுடை உணவையும் கள்ளினையும் உண்டு அழகிய விலங்குக் கூட்டங்களை வேட்டையாடும் தொழிலையும், ஒளி பொருந்திய வாளினால் பகைவர்களுக்கு நரக வாழ்க்கையையும் காட்டும் திறன்மிகுந்த இளைஞர்களின் தலைவன் ஆர்க்காட்டின் குறுநில மன்னனாகிய சேந்தனின் தந்தை அழிசி. அவனின் ஆர்க்காடு எனும் ஊரைப் போன்ற குறையில்லாத மாட்சிமை நிறைந்த தலைவியின் அழகு, உன் பிரிவினால் அழிவதும், தொலைவதும் கண்டு ஊரார், உறவினர் மற்றும் சுற்றத்தார் அனைவரும் பழித்துப் பேசுவது அதிகமாகிறது. அதனால் எங்களுடைய தெருவிற்கு நீங்கள் வரவேண்டாம். உங்கள் மாலையத் தலைவிக்குத் தரவும் வேண்டாம் எனத் தோழி தலைவனிடம் சொல்வதாகப் பாடியுள்ளார் பரணர்.
எளிமையான வரிகள்
எங்கள் தெருவுக்கு வராதே
உந்தன் மாலையத் தராதே,
உன் பிரிவின் வலி அதிகமாகி
உறக்கம் கூட மறந்து போச்சு,
நினைவின் சுமை தாங்காது
அவள் அழகும் மாறிப்போச்சு,
உன் எண்ணம் அழுக்காக
ஊர் முழுக்க பழிப் பேச்சு,
எங்கள் தெருவுக்குள் வராதே
உந்தன் மாலையும் தராதே,
காவிரி நதிக்கரை சூட்டிய
மருதமரங்களில் கட்டும்
யானைகள் கொண்ட
வேந்தன் மகன் சேந்தன் …
கள்ளுண்ணும் வேட்டைக்காரன்
இளைஞர் படைத் தலைவன்
பகைவருக்கு நரகம் காட்டும்
வாள் வீசும் மாவீரன் அழிசி…
பெருமைமிக்க அவன் ஊரான
ஆர்க்காடு போல் குறையில்லா
இவளது அழகு உன்னால்
அழிகிறது … தேய்கிறது…
எங்கள் தெருவுக்கு வராதே
உந்தன் மாலையத் தராதே
பறை இசைத்தவர்கள் பறையர்கள், யாழ் இசைத்தவர்கள் பாணர்கள், துணங்கைக் கூத்தாடியவர்கள் எல்லாரும் கூத்தரே. இவர்கள் யாரும் ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள் என வேறுபடுத்திக் காட்டும் எந்தக் குறிப்பும் இல்லை. பட்டினம், பாக்கம் நெய்தல் நிலத்து இடங்கள், சேரி, குடி, நகர் குறிஞ்சி நிலத்து இடங்கள், ஊர், பதி என்பவை கடல் அல்லது நீர்ப்பரப்பு சார்ந்த இடங்களிலும் இருந்துள்ளது என வீ.எஸ் ராஜம் அவர்கள் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சேரி என்பது அனைத்து மக்களும் சேர்ந்து வாழும் இடமாகவே இருந்துள்ளது. தாழ்ந்தவர், உயர்ந்தவர் வாழுமிடம் என்று எதுவுமில்லை என்பதைத் தொல்காப்பியம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் மரபில் மக்கள் சேர்ந்து வாழுமிடத்தைச் சொல்லப் பயன்பட்ட சிறந்ததொரு தமிழ்ச்சொல்லான “சேரி” எனும் சொல்லை வைத்து ஒருவருக்கொருவர் இழிவுபடுத்திக் கொள்வது மாற வேண்டும். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை வரையறுப்பது வாழுமிடமோ, சாதியோ, மதமோ கிடையாது. நாம் வாழும் முறைதான் என்பதை உணர்ந்தால் சேரி என்பதன் பொருள் விளங்கும்; வாழ்வு சிறக்கும்; ஒற்றுமை பிறக்கும்.
– தொடரும்..
– சித்ரா மகேஷ்
ஒவியம் : உதய பாஸ்கர்
முந்தைய வாரம் : பார்த்த முதல் நாளே… – thamizhkkaari.com