Connect with us

Hi, what are you looking for?

சங்க இலக்கியம்

இருமனம் கண்ட திருமண வாழ்வு…

 ‘சங்கம் மொழிந்த காதல்’  – காதல் 8

காலங்காலமாகக் குழந்தைப் பருவத்தில் நாம் பார்த்துப் பழகிய உறவுகள், நடந்த நிகழ்ச்சிகள் காலம் கடந்தும் உள்ளத்தில் நிற்கும். குடும்ப விழாக்கள், தெருவோர விளையாட்டுக்கள், பள்ளிக்காலத்து நிகழ்ச்சிகள், ஊர்த்திருவிழாக்கள் ஆகியவற்றில் உருவான உறவுகள், அவர்களோடான தொடர்புகள் என்றும் மறக்காதவை. அவற்றில் சில உறவுகள் மட்டுமே வாழ்வில் நம்மோடு பயணிக்கும் வாய்ப்பைப் பெறும். சிறுவயது நட்பு காதலாக மாறிய கதைகள் நிறைய உண்டு. ஓடிப்பிடித்து விளையாடும் காலத்தில் எதிரிகள் போல, எதற்கெடுத்தாலும் சண்டை போடுவதைப் பார்த்தவர்கள் விலக்கிவிட்டு ஒற்றுமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவர். அம்முயற்சி தோல்வியுற்றபின் இனி இவர்கள் நட்புத் தொடராது என முடிவு செய்வர். பல ஆண்டுகள் கழித்து அந்த நட்பு காதலாக மாறித் திருமணத்தில் இணைந்திருப்பதைக் கண்டு வியப்படைந்தாலும், கடந்த காலக் குறும்புகளைச் சொல்லி வம்பு செய்து மகிழ்வர். அதையும் தாண்டிச் சில உறவுகள் நட்பாக மட்டுமே இனித்திருக்கும். 

உலகில் நம்பிக்கை மட்டுமே ஆண், பெண் உறவு நிலைத்திருக்கக் காரணம்; நீடித்திருப்பதன் உண்மை. நுண்ணிய இழையளவில்தான் ஒட்டிக் கொண்டிருக்கிறது அந்த உறவு. பார்க்கும் பார்வையினால் பிரிவு நேர்ந்த கதைகளும் உண்டு. புரிதல் இல்லாது பிரிந்தோரும் உண்டு. எந்த உறவானாலும் சொல்லும் செயலும் வேறுபட்டிருப்பின் நிலைக்காது; சிறக்காது. பொறுமைக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுவதும் பெண்ணே. ஒரு உறவு பொருள்படுவதற்குக் காரணமாக இருந்து காலங்கள் தாண்டியும் அதை நடத்திச் செல்வது பெண்ணால் மட்டுமே முடிகிறது. அன்றும், இன்றும் குடும்பங்களில் ஒற்றுமையும், இன்பமும் நிறைந்திருக்கச் செய்வது பெண்ணே. உறவுகளின் முக்காலமும் பெண்ணவளின் உள்ளத்து உறுதியால் முடிவுசெய்யப்படுகிறது. அதுபோலவே, சில நேரங்களில் பொறுமையின் எல்லை தாண்டி ஆக்கும் சக்தியாக இருப்பவள் அழிக்கும் சக்தியாகவும் பிறப்பெடுக்கிறாள். அந்நிலைக்கு ஆட்படுத்துவது அவளைச் சுற்றியுள்ள சமூகம், குடும்பம், உறவுகள்,நட்புகள்… அத்தனையும் தாண்டி வெற்றி பெறுவதே வாழ்க்கை அவளுக்குக் கற்றுத்தரும் பாடம்.

வானும், மண்ணுமாய் ஆணும் பெண்ணும் அன்பைப் பொழிந்தும், விளைவித்தும் வாழ்வதே அழகிய காதல் உறவுக்கான பரிசு. சிறு வயதில் பொய்ச் சண்டையிட்டவர்களின் மோதல் காதலாகித் திருமனத்தில் இணைந்த கதை அன்றே சங்க காலத்தில் நம் முன்னோர் தொடங்கி வைத்ததே. சண்டைபோட்டவளோடு,”நீ ஒரு காதல் சங்கீதம், வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” எனப்பாடிய நம் பாட்டன் கதையை இந்தக் குறுந்தொகைப் பாடலின் காணலாம்.

குறுந்தொகைப் பாடல்

இவன் இவள் ஐம்பால் பற்றவும். இவள் இவன்
புன்தலை ஓரி வாங்குநள், பரியவும்
காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது,
ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
நல்லை மன்றம்ம பாலே- மெல் இயல்
துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
மணம்மகிழ் இயற்கை காட்டியோயே. (229)

பாலைத்திணை
பாடியவர்: மோதாசனார்
தலைவனையும், தலைவியையும் வழியில் கண்டவர்கள் கூறியது

அருஞ்சொற்பொருள்

இவன் இவள்-இவன் இவளுடைய
ஐம்பால்-ஐந்து வகையாக முடிக்கப்படும் கூந்தல் (குழல்,அளகம்,கொண்டை,பனிச்சை,து ஞ்சை)
பற்றவும்-பிடித்து இழுக்கவும்
இவள் இவன்-இவள் இவனுடைய
புன்தலை-குறைந்த மயிரையுடைய தலை
ஓரி- ஆணின் தலைமயிர்
வாங்குநள்-இழுப்பவள்
பரியவும்-ஓடவும்
காதற் செவிலியர்- அன்புடைய செவிலித் தாய்கள். (செவிலித்தாய்- தாயின் தோழி, தோழியின் தாய்)
தவிர்ப்பவும், தவிராது- தடுக்கவும், நிறுத்தாமல்
ஏதில் சிறுசெரு –தொடர்பு இல்லாத சிறிய சண்டைகள் (செரு-போர்)
உறுப-நடத்தினர்
மன்னோ-அசைச்சொல்
நல்லை- நல்லது 
மன்ற-உறுதியாக
அம்ம- அசைச்சொல்
பாலே-ஊழ்வினை
மெல் இயல்-மென்மையான தன்மை
துணைமலர்ப் பிணையல்- மலர்களை இணைத்துக் கட்டிய மாலை போன்ற
அன்ன இவர்- போன்ற இவர்கள்
மணம்மகிழ் இயற்கை- மகிழ்வான மண வாழ்க்கையை வாழ
காட்டியோயே- வழியைக் காட்டினாய்.

பாடலின் பொருள்

இவன் இவளுடைய ஐந்து வகையாக முடியப்படும் கூந்தலைப் பிடித்து இழுக்கவும், இவள் இவனுடைய குறைவாக உள்ள தலைமயிரைப் பிடித்து இழுத்துவிட்டு ஓடவும், இருவர் மீதும் அன்புகொண்ட செவித்தாய்கள் தடுத்தாலும் நிற்காது விளையாடுவதும், எந்தவிதத் தொடர்பும் இல்லாத சண்டை போடுவதுமாகவே இருந்தனர். ஆனால் இன்றோ, மலர்களை இணைத்து இரண்டிரண்டு மலர்களாகச் சேர்த்துக் கட்டிய மாலையைப் போன்று, இவர்கள் இருவரும் மகிழ்வான திருமண வாழ்க்கையை மேற்கொள்ள வழிசெய்த ஊழ்வினை/விதி மிக நல்லது.

எளிமையான வரிகள்

இவன் இவள் கூந்தல் பிடித்திழுக்கவும்
இவள் இவன் தலைமயிரை இழுக்கவும்
குறும்புத்தனம் இனி வேண்டாமென்று
செவிலித்தாயினர் கொஞ்சித் தடுத்தாலும் 
கேட்காது செல்லச் சண்டைகள் நடத்தினர்.
இன்று மலர்கள் சேர்த்த மாலையென
இருமனமிணையத் திருமணவாழ்வினில்
மகிழ்ந்திருக்கச் செய்தாய் நல்விதியே.

வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் காலம்தான் நடத்துகிறது; நகர்த்துகிறது. நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தரப் பகைவனும் இல்லை. மனிதனின் ஆயுளை நாட்களில் எண்ணிப் பார்க்கையில் அச்சுறுத்தும். அதற்குள்தான் அத்தனை வேறுபாடுகள், சண்டைகள்,பிரிவினைகள் என மனிதன் மனிதனுக்காக ஏற்படுத்திய கேடுகள். எண்ணம் போல்தான் வாழ்க்கை என்பது வாழும் உண்மையாகக் கண்டு கொண்டிருக்கும் காலச்சூழலில் வாழும் மக்கள் உறுதிப்பாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே சமுதாயம் செழிப்புடன் வாழும்;வளரும்.

ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தெரியாத சிறு வயதில் எந்தவிதக் காரணமுமின்றிச் சண்டையிட்டுக் கொள்வது இயல்பு. அதுவும் விளையாட்டுகளில் ஒன்று. அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் சேர்ந்து விளையாடத் தொடங்கிவிடுவதும் குழந்தைப் பருவத்து இயல்பே. அச்சண்டைகள் உள்நோக்கம் அற்றவை. ஆனால் மறக்க முடியாது நீங்கா நினைவுகளில் நிற்பவை. வளர்ந்து பெரியவர்களானபின் வேடிக்கையாகத் தோன்றும். அப்படிச் சண்டையிட்டவர்கள் காதல் கொண்டு, காதல் கொள்ளும்போது இன்பம் இரட்டிப்பாகும் இருவருக்கும். பழைய நினைவுகளோடு புதிய பயணத்தைத் தொடங்குபவர்களைக் கண்டு பெற்றோரும், உற்றாரும் வியப்படைவர். இனியாவது சண்டை போட வேண்டாமென்று சொல்லிச் சிரிப்பார்கள். ”உன்னோடு காதலென்று பேச வைத்தது நீயா? இல்லை நானா? என்று புதிய சண்டை தொடங்கும். மீண்டும் முதலில் இருந்தா?  காதலில் ஊடல் இல்லை என்றால் எப்படி?அதைத்தான் திருவள்ளுவர்,

“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம் 
கூடி முயங்கப் பெறின்” (1330)

அன்றே சொல்லி வைத்தார். ஐயன் சொல் உலகப்பொதுமறை. ஆதலால் ஊடுதல் கூடுதல் வாழும் மக்கள் அனைவருக்கும் பொது விதி. மோதாசனார் அன்று கண்ட காதலர்களுக்கு நன்மை செய்த விதி… நமக்கு நல்லது செய்யட்டும். நம்பிக்கைதானே வாழ்வின் அச்சாணி. ஊடுங்கள், கூடுங்கள்…ஒவ்வொரு நொடிப்பொழுதும் காதலால் நிரம்பட்டும். நிறையட்டும் வாழ்வு.

தொடரும்…

– சித்ரா மகேஷ்

Advertisement. Scroll to continue reading.

ஓவியம் : உதய பாஸ்கர்

முந்தைய வாரம் : மயில் இறகாம் காதல் https://thamizhkkaari.com/?p=865

Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

சங்க இலக்கியம்

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

Advertisement