90 களின் பெண்களுக்கு அதுவும் கிராமத்துப் பெண்களுக்கு “அயலி” புதியவள் அல்ல. நிறையப் பேர்களுக்கு இந்த அனுபவம் இருந்திருக்கும். “அயலி” பார்க்கும்போது, பொண்ணாப் பொறந்ததாலே பல பொறுப்பு வந்தது மேலே” என்று தூர்தர்சனில் நடிகர் ராஜீவ் நடித்த ஒரு தனிப்பாடல் என் 10 வயதில் பார்த்தது நினைவுக்கு வந்தது. அன்றே, பெண் என்றால் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்த நாள்கள் நினைவு வந்தது. சொல்லிப் புரிய வைக்க முடியாத வலியை உள்ளமும், உடலும் தாங்கும் பெண்ணுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று மாதவிடாய்ப் பிரச்சனை. வயதுக்கு வருவது பெண்ணுக்கு மட்டுமா? “எனக்கு என்ன தேவையோ அதுதான் அழகும்மா” என்பவை மிக மிக எளிமையான வசனம். ஆனால் ஆழமான, உறுதியான ஒன்று.
வயதுக்கு வரும் வரைக்கும் படிப்பு, பின்னர் திருமணம், குழந்தை, குடும்பம் எனச் சுமக்க முடியாத வயதில் பெரும்பாரத்தை ஏற்றி வைக்கும் அவலம் இன்னும் நடந்து கொண்டே இருக்கின்றது பல கிராமங்களில். தொடங்கியது முதல் முடியும் வரை பெண்களுக்கான உரிமைக்குரலை எழுப்பிக் கொண்டே இருந்தது பெண் கதாபாத்திரங்களே. ஒரே ஒரு ஆண் பேசுகின்றான் குரலற்றவனாய். இன்னொருவன் பேசுவதைக் கேட்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஆணுக்கு ஆணே எதிரியாகத் தன் மூட நம்பிக்கையால் மொத்த சமுதாயத்தையும் பலியாக்குவதைக் காணமுடிகின்றது. ஆசிரியர் பணியில் இருந்தும் பொறுப்பற்றவராய் ஊர்க்கட்டுப்பாடு என்று பெண் கொடுமைக்கு ஒரு ஆணே துணை நிற்பது பெரும் அவலம்.
கதைக்குள் சென்றதும், ஒரு கிராமத்துக்குள் வாழும் உணர்வைத் தரும்படியான கதையமைப்பும், படத்தொகுப்பும் இசையுடன் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்தது. ஊர் தப்பாப் பேசும், பொட்டச்சி இப்படித்தான் இருக்கணும், தலையெழுத்து, ஊர்க்கட்டுப்பாடு இன்னும் ஏராளமான பெண்களுக்கென்றே உருவாக்கப்பட்ட அத்தனையும் சொல்லப்பட்டு, அதனால் பலியாகும் அப்பாவிப் பெண்களின் வாழ்வையும் சொல்லும் கதை இது. பள்ளிக்கூடத்தில் வரிசையில் நிற்கக்கூடத் தயங்கும் பெண் குழந்தைகளின் மனநிலையைச் சொல்லும் காட்சி, கதையின் பயணத்தின் பின்னால் அழுத்தம் பெறுகின்றது.
துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் அம்மாக்களும், பாட்டிகளும் அத்துன்பத்தையே தன் மகளுக்கும், பேத்திக்கும் தந்து அவர்களின் குழந்தைப் பருவத்தைக் கொல்வதும் அவர்கள் புத்திக்குப் புரியாதபடிப் பார்த்துக் கொள்கின்ற ஆண் ஆதிக்கத்தையும் சொல்கின்றது கதை. பெண்ணுக்குப் பெண்ணையே எதிரியாக்கியது தெரியாது அவர்களை ஆட்டுவிக்கும் கருவியாக மூடநம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் ஆண்களின் மாற்றமே பெண்களின் முன்னேற்றம் என்பதை வலியுறுத்தும் செய்தியும் தருகின்றார் இயக்குநர்.
எப்படி உட்காரனும், நடக்கனும், சிரிக்கனும், வயசுக்கு வந்தா என்ன உடை போடனும், உள்ளாடை போடும் முடிவு கூட அம்மாக்கள் செய்ததற்குப் பின் மறைக்கப்பட்டிருப்பது பெண்ணடிமை. அம்மாவுக்கு அவங்க அம்மாவுக்கு எனப் பெண்களால் பெண்களுக்குக் கடத்தப்படும் கொடுமைகள். பெண்மையை வேண்டாம் என்று வெறுக்கும் மனநிலையைப் பெண்ணுக்குத் தருகின்றவையே அத்தனையும். அதையும் தாண்டித் தன் பெண்ணுக்குத் துணை நிற்கும் அம்மா மகளைக் காக்கும் அயலியாக அழகாகின்றாள். தன் நிலையத் தான் உணரக்கூட விரும்பாமல் வாழும் பெண்களுக்கு இடையே தமிழ்ச்செல்வியின் அம்மா புரட்சியைத் துவக்கி வைத்து மாற்றத்தைத் தொடங்கி வைக்கின்றாள்.
இதுபோன்ற சூழ்நிலையில் எத்தனை அம்மாக்களால் தமிழ்ச்செல்விக்குக் கிடைத்த அம்மாவைப் போல இருக்க முடியும். ஆளான நான் பாவியே, பாழான என் ஆசையே என்ற பாடல் வரிகளைக் கேட்கும்போது எத்தனை பெண்களுக்குத் தன் வாழ்வோடு பொருத்திப் பார்க்க முடிகின்றதோ? வலியைத் தருகின்றதோ?. கதை முழுக்க ஆணின் அடக்குமுறையும், கடவுள் பேரைச் சொல்லி பயமுறுத்துவதும், எதையாவது செய்து தன் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைப்பவர்களின் சூழ்ச்சியும், பெண்ணை வைத்துதான் ஊரின் மரியாதையும், கெளரவமும் என்று சொல்லும் கட்டுக்கதைகளும், மக்களைப் பிரித்தாளும் தந்திரங்களும் என காலம் காலமாக பெண்ணினத்தை மந்தப்படுத்தி, மழுங்கடித்து வைத்திருக்கும் சமுதாயத்தின் அவலங்களைச் சொல்லியிருக்கும் இயக்குநர் பெண்கள் போற்றும் “அயலி”
எனக்கு எதுவும் வேண்டம்பா, அக்காவப் படிக்கவை, அக்கா படிச்சு கலெக்டராக ஆசைப்படுதுன்னு அப்பாவிடம் சொல்லும் தன் பையனுக்கு, அதெல்லாம் தப்புடா மவனே, நம்ம பழக்க வழக்கம், பண்பாடு இதெல்லாம் இருக்கு, நம்ம பெருமைய யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்று பதில் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தவர் அப்பாவைப் பார்த்துக் கேட்கும் கேள்வியும், அந்தப் பையன் சொல்வதும் செருப்படி வசனங்கள்.
“ஏய் என்னடா புள்ளைக்குப் பிய்ய ஊட்டிட்டு இருக்க….
கேட்குப்போதே நாறுச்சா அதான் கேட்டேன்
உம்புள்ள படிச்சா உனக்குதாண்டா பெரும”
என்று கேட்டுவிட்டுப் போனதும் பையன் அப்பா, “வாயக் கழுவுப்பா நாறுது” என்று மகன் சொல்வதும் உரிமையை உரக்கச் சொல்லும் இடங்கள்.
ஆம்பளைங்கன்னு நாம எதுக்கு இருக்கோம், ஆளாளாளுக்குச் சேலையைக் கட்டிட்டுத் திரிய வேண்டியதுதான? என்றதற்குப் பதிலாக,
கட்டிக்கோ, நீ என்ன பொறக்கும்போதே வேட்டி சட்டையோடவா பெறந்த, அம்மணமாத்தான திரிஞ்ச, எல்லா நடுவுல வந்ததுதான, பிடிச்சா அம்மணமாச் சுத்து, இல்லைண்ணா எதையாவது கட்டிட்டுத் திரி”
இதுபோன்ற வசனங்களை எழுதிய இயக்குநர் புரட்சிக்காரன் தான். கல்வி மட்டுமன்றி அடிப்படை உரிமைகள் கூடப் பெண்களுக்கு மறுக்கப்பட்ட காலத்தைக் கண்முன் காட்சியாக்கியது மட்டுமன்றி, வசனங்களிலும் உரிமைப் போரை நிகழ்த்திக் காட்டிய இயக்குநர் முத்துக்குமார் பெண்களுக்குப் புதிய பெரியாரே.
– தமிழ்க்காரி