‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3
சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட நிகழ்வுகள் இயங்குகின்றது. ஒவ்வொரு உறவுக்கும் ஏற்றதுபோல் நிகழ்த்துதல் வேறுபடும். அதற்குத் தகுந்தபடிதான் உணர்வும், உறவும் நம்மோடு இயங்கும். ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு உறவுடன்தான் தொடங்கும்; முடியும். அப்படித் தொடங்கி முடியும் நாள்கள், காதலோடும் கனவுகளோடும் பயணப்படும் ஆணுக்கும், பெண்ணுக்கும் எண்ணியபடி நடக்குமா? கனவு நனவாகுமா? இன்று இருவரும் பார்த்துக் கொள்ள முடியுமா? எனத் தொடங்கிப் பலவித எண்ணங்களுக்குள் வட்டமடித்துக் கொண்டபடிதான் இயங்கும்.
ஒரு பெண்ணின் வாழ்க்கையில் அவளோடு பயணிக்கும் ஆண்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய்ச் சிறப்பும், குறிப்பிடும்படியான பங்கும் இருக்கும். உறவுக்கு ஏற்றால்போல் பெண் தன் அன்பால் நிறைந்திருப்பாள்; உறவுகளை நிறைத்திருப்பாள். அதிலும் காதலன்/கணவன் என வரும்போது அன்பும், கோபமும் இணைந்தே பயணிக்கும். அவனைப் பற்றிய முக்கியத்துவம் இல்லாத செய்திகள் கூட அவளுக்கு வரலாற்றுச் செய்தியாகும். வாழ்வில் பிரிவென்பது யார் ஒருவருக்கும் தீர்க்கமுடியாத வலியைத் தருவதாகும். அதுவும் காதலிப்பவர்களுக்கு ஏற்படும் பிரிவு என்பது பெரும் மனவலியையும், உள்ளத்துள் ஆயிரமாயிரம் உணர்வுப் போராட்டங்களையும் நடத்துவதோடு உணவு, உறக்கமின்றித் தவிக்க வைக்கும் கொடுமையைச் செய்யும் ஒன்று.
சங்கக்காதலில் பிரிவுத்துயருக்கான பாடல்களின் வழித்தோன்றல்களே பிரிவுக் கவிதைகள், சோகப் பாடல்கள் என்றும் சொல்லலாம். உலகப் பொதுமறை திருக்குறளிலும் பிரிவு ஆற்றாமை என்ற அதிகாரம் இடம்பெற்றுள்ளது. போகமாட்டேன் என்று சொல்வதனால் சொல், இல்லை போவாயென்றால் நீ திரும்பி வரும்பொழுது உயிருடன் இருப்பவர்கள் யாரோ அவர்களிடம் சொல்லிவிட்டுப்போ எனும் செய்தியடங்கிய குறள் தொடங்கி பிரிந்த பின்னர் அடையும் துன்பநிலையை என்னால் ஏற்றுக்கொண்டு வாழவேமுடியாது என உறுதியாகப் பிரிவதை மறுக்கும் உள்ளநிலைப்பாட்டைச் சொல்லும் குறள்கள் பிரிவுநிலையைப் பேசுகின்றன.
தலைவன் பிரிவில் உள்ளம் உழன்று வாழ்வின் ஒட்டுமொத்தத் துன்பமும் தனக்கு மட்டுமே இருப்பதாய் நினைத்துக் கொண்டு, அவன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், வழக்கம் போல் தனக்கு ஆறுதல் சொல்லுவதற்காகவே பாணன் இப்போதும் தன்னிடம் பொய் சொல்வதாக நினைக்கிறாள். தன்னைப் பிரிந்து செல்கையில் குறித்த நேரத்தில் வந்து விடுவேன் என்ற தலைவன், இன்னும் வராதது எண்ணித் துயரத்தில் இருக்கிறாள். தலைவன் வந்து கொண்டிருக்கிறான், வந்துவிட்டான், வரப்போகிறான் என்று சொல்லித் தன்னை ஆறுதல்படுத்துவதற்காகப் பலமுறை பொய் சொன்ன பாணன் மீது நம்பிக்கை இழந்து, தனக்குள் எழும் ஐயத்தையும், ஆற்றாமையையும் அடக்க முடியாதவளாகிப் பொறுமை இழந்து, தலைவன் வந்திருந்தால் உன்னுடன் அழைத்து வராமல் நீ மட்டும் ஏன் தனியாக வந்தாய்? நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் யாராவது உனக்குச் சொன்னார்களா? அப்படிச்சொன்னவர் யார்? அப்படிச் சொன்னவர் உன்னைப் போலவே பொய் சொல்லியிருப்பாரோ? தெளிவாகச் செய்தியைச் சொல் என்று பல கேள்விகளைக் கேட்கிறாள். பின்னர், எனக்கு உண்மையை மட்டும் சொன்னாய் என்றால், வெண்மையான தந்தங்கள் கொண்ட யானை விளையாடும் சோணை நதி ஓடும் செல்வச் செழிப்பு மிக்க பாடலிபுத்திர நகரத்தை உனக்குப் பரிசாகத் தருகின்றேன் என்கிறாள்.
காதலைச் சொல்லும் பாடலில், காதலர்கள் வாழும் நாட்டின் வளம் பற்றியும் சொல்லுவது சங்கப்பாடல்களின் தனிச்சிறப்பு. இயற்கையை, அதுசார்ந்த நிகழ்வுகளைச் சங்கப்புலவர்கள் தாங்கள் வாழ்ந்த காலச்சூழலில் கண்ட காட்சிகள், நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றைப் பாடலில் இயல்பாக வெளிப்படுத்தியுள்ளனர். கவிதைக்குப் பொய்யழகு என்று சொல்லப்பட்டாலும், அவர்கள் எழுதிய பாடல்களின் வழியாகத்தான் பழந்தமிழர்களின் வாழ்வும், வளமும் வரலாறாகச் சொல்லப்படுகிறது. வாணிகம் செய்து பொருள் சேர்க்கும் காரணமாகப் பிரிந்து சென்ற தலைவன் திரும்பி வரும் நாளை எண்ணிக் காத்திருக்கும் தலைவி, தலைவன் வருகிறான் என்று சொன்ன பாணனிடம் பேசுவதாக அமைந்த பாடல் இது.
குறுந்தொகைப் பாடல்
நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
வெண்கோட்டு யானை, சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயர்
யார் வாய்க் கேட்டனை, காதலர் வரவே? (பாடல்-75)
பாடியவர்: படுமரத்து மோசிகீரனார்
திணை – மருதம்
துறை – தலைவன் வருகின்ற செய்தியைச் சொன்ன பாணனிடம் தலைவி கூறியது.
அருஞ்சொற்பொருள்
நீ கண்டனையோ – நீயே உன் கண்ணால் பார்த்தாயா?
கண்டார்க் கேட்டனையோ- இல்லை, பார்த்தவர்கள் சொன்னதைக் கேட்டாயா?
ஒன்று தெளிய – ஒன்று தெளிவாக
நசை – விருப்பம், ஆசை
மொழிமோ – சொல்வாயாக
வெண் – வெண்மை நிறம்,
கோட்டு – கொம்பு,
வெண்கோட்டு யானை – வெண்மை நிறத் தந்தையுடைய யானை
சோணை – சோணை நதி (சோன் / கங்கையின் கிளை நதி],
படிதல் – படியும் – குளித்தல்/ நதியில் குளித்து விளையாடுதல்.
பொன்மலி பாடலி – செல்வம் நிறைந்த பாடலிபுத்திரம்
பெறீஇயர் – பெறுவாயாக
யார் வாய்க்கேட்டனை – யார் சொல்லிக் கேட்டாய்
காதலர் வரவே – காதலர் வரும் செய்தியினை
ஒருநாள் எழுநாள்போல் செல்லும் சேண் சென்றார்
வருநாள் வைத்து ஏங்குபவர்க்கு. (1269)
என்ற குறளில் தலைவனைப் பிரிந்திருந்தாள் ஒரு நாள் ஏழு நாட்கள் போல் வருத்தும் எனப் பிரிவின் ஆழத்தை வள்ளுவம் சொல்கிறது. தன்னால் தர முடியாது என்று தெரிந்தாலும் அளவிடமுடியாத அன்போடு காதலும், அதில் ஏற்படும் பிரிவின் துயரை உணர்த்தும் மிக அழகான பாடலாக இதைப் பார்க்கலாம்.
எளிமையான வரிகளில்
நீ பார்த்தாயா?
பார்த்தவர் சொன்னதைக் கேட்டாயோ?
தெளிவாக ஒன்றைச் சொல் – உன்
ஒற்றைச்சொல்லில் விளக்கம் சொல்!
வெண்ணிறத் தந்தத்து யானை,
சோணை நதியில் குளித்து மகிழ்ந்து
விளையாடும் செல்வம் செழித்திருக்கும்
பாடலிபுத்திரத்தைத் தருகிறேன் உனக்கு!
என்னை உழற்றும் உண்மை சொல்!
நீ சொல்லும் சொல்லைச் சொன்னது
யாரென்று சொல்!
என்னவர் வருகை உன்னிடம் சொன்னவர்
யாரெனச் சொல்!
காதலில் இணைந்திருக்கும் இன்பநேரங்களைவிடப் பிரிவு தரும் துன்பவலியும், நிதம் உள்ளம் கொல்லும் நினைவுகளும் எதைக் கொண்டும் இட்டு நிரப்பமுடியாதவை. காரணங்கள் மாறுபட்டாலும் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு பெண் தன் ஆணுக்காகக் காத்திருப்பது மாறவில்லை. ‘வினையே ஆடவர்க்கு உயிர், மகளிர்க்கு உயிர் ஆடவர்’ என்பதில் மாற்றங்கள் ஏற்பட்டு இருந்தாலும், ஏதாவது ஒருவகையில் எங்காவது ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டுக் கொண்டுதானிருக்கிறாள்.
ஆணும், பெண்ணும் சரிநிகர் சமானம் என்பது நடைமுறைச் செயல்பாட்டில் இருந்தாலும், பிரிவும், காத்திருப்பும் அதிகமாக வலியைத் தருவது பெண்ணுக்கே. பெண்ணின் தனிமையும், தவிப்பும் சொல்லும் காதல் பாடல்களின் வழி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழனின் காதல், இன்பம், துன்பம், தொழில், நட்பு, வீரம், நாட்டுவளம் என அனைத்தையும் காதலோடு சேர்த்து நமக்குச் சொல்லிச் சென்ற புலவர்கள் புகழ் வாழிய வாழியவே.
தொடரும்…
– சித்ரா மகேஷ்
ஓவியம் : உதய பாஸ்கர்
முந்தைய வாரம் : https://thamizhkkaari.com/?cat=4 தூங்காதவள் ஆனேன்..