‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 7
”நாடென்ப நாடா வளம் தரும் நாடு” எனும் வள்ளுவனின் குறளுக்கு ஏற்றபடிதான் தமிழன் வளமும், வாழ்வும் இருந்துள்ளது. அதாவது பெரும் முயற்சிகள் செய்தபின் பெற்ற வளமாக இல்லாது இயற்கையாகவே அமைந்த வளத்தினைக் கொண்டு விளங்குவதே சிறந்த நாடு என்பது பொருள். அந்த விதிக்கு மாற்றமில்லாது எண்ணற்ற இயற்கை வளங்களுடன் பெருமைபெற்று விளங்கியது தமிழனின் நாடு. என்ன வளம் இல்லை என் நாட்டில்? எனக் கேட்கும்படியும் இல்லாத வளம் இல்லை எனப் போற்றும்படியும் நீர்,நிலம்,மலை,மழை மற்றும் அனைத்துச் செல்வங்கள் நிறைந்து இருந்த நாட்டில் நிறைவான வாழ்வைக் கொண்டிருந்தனர் நம் முன்னோர். அந்த வாழ்வை வருங்காலத்தினர் அறிந்திடப் புலவர்கள் எழுதி வைத்த பாடல்களே இன்று தமிழின், தமிழனின் வரலாறாகத் திகழ்கிறது
அரசு+ இயல்= அரசியல், அரசாங்கத்தின் கடமைகள் அனைத்தையும் பொறுப்புணர்வுடன் இயக்குதல் அல்லது இயங்கச் செய்தல். ஒரு அரசின் கடமைகளையும், இயல்புகளையும் திறமையாக நடத்தும் அமைப்பு அரசாங்கம். அதை ஆளும் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் அதன் அரசர்/ அரசி அல்லது தலைவர். மன்னராட்சி முடிவுற்று மக்களாட்சி முறையில் வாழ்ந்து வருகிறோம். ஆயினும், மக்கள் ஆதரவும், ஒத்துழைப்பும் அரசமைப்புக்குத் தேவை. தனக்கு வேண்டிய காலத்தில் நல்லவைகளைக் கூறி மக்களின் உதவியினைப் பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதும் அனைத்தையும் மறந்துவிடுகின்றனர். மக்களின் தலைவர் என்பவன் சுயநலமின்றி இருந்தால் மட்டுமே அவர் செய்யும் பொதுநலம் சிறக்கும்.
நாட்டைக் காப்போம் என்ற பெயரில் வீட்டை மட்டும் பல மடங்கு உயர்த்திக் கொள்பவர்கள்தான் ”அரசியல்” என்ற சொல்லின் அடையாளத்தை, அதன் பொருளை மாற்றியதற்குப் பொறுப்பு. இன்று அரசியல் சாக்கடை என்றும், சொல்லக்கூடாத கெட்ட வார்த்தையாகவும் மாறிப்போனதுக்கும் காரணம் அவர்களைப்போன்றவர்களே. அரசியலில் அரசியல், அமைச்சியல் என நாட்டை ஆளும் முறை பற்றி வள்ளுவர் கூறிச் சென்றதைப் படித்து, அதில் தேர்வானவர்கள் மட்டுமே அரசியல் செய்ய வேண்டும்; நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்ற விதி/சட்டம் கொண்டு வந்தால் சிலராவது போற்றத்தக்க தலைவராகும் வாய்ப்பு அமையும்.
காட்டில் வாழும் விலங்குகளில் உருவத்திலும், ஆற்றலிலும் பெரியது யானை. ஆனாலும், மனிதர்களுடன் பழகிய பின்னர் அழகான ஒரு புரிதலுடன் வாழ்வதை வழக்கப்படுத்திக் கொள்கிறது. இன்றும் கேரள மாநிலத்தில் யானைகளை வீடுகளில் வளர்ப்பதைக் காணலாம். ”யானையைக் கட்டித்தீனி போட்டது போல” என்று சொல்வதைக் கொண்டு, யானை வளர்ப்பது எளிதல்ல என்று தெரிகிறது. அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்ய செழுமையான வளம் கொண்ட நாட்டினைக் கொண்டிருந்தால் மட்டுமே முடியும். இந்தக் குறுந்தொகைப் பாடலில் வரும் தலைவனும் அத்தகைய சிறப்புடைய நாட்டைச் சேர்ந்தவனாவான்.
குறுந்தொகைப் பாடல்
கன்று தன் பயமுலை மாந்த, முன்றில்
தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில்
வீறுபெற்று மறந்த மன்னன் போல
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென்சீர்க்
கலிமயிற் கலாவத்தன்ன இவள்
ஒலிமென் கூந்தல் உரியவால் நினக்கே. (225)
பாடியவர்: கபிலர்
தோழி கூறியது
குறிஞ்சித்திணை
துறை: திருமணத்திற்காகப் பொருள் சேர்க்கப் பிரிந்து செல்லும் தலைவனிடம், இதுவரை உன்னுடைய விருப்பத்தின்படித் தலைவியைச் சந்திக்க உதவிய நன்றியை மறக்காது, என் தோழியை மணந்து கொள்ள விரைவில் வரவேண்டும் என்று தோழி கூறியது.
அருஞ்சொற்பொருள்
கன்று- யானைக் கன்று/குட்டி
தன்- தாய் யானையின்
பயமுலை – பயனுடைய முலையில் (பயனுடைய- பால் சுரந்து பயன் தருவதால் , பயம்- பயன்)
மாந்த-குடிக்க, உண்ண
முன்றில்-வீட்டின் முன்பகுதி/முன்னிடம்
தினை-தினைப்பயிரை
பிடி உண்ணும்-பெண் யானை உண்ணும்
பெருங்கல் நாட- பெரிய மலைகளைக் கொண்ட நாடனே
கெட்ட இடத்து-வறுமையுற்ற காலத்தில்
உவந்த உதவி-பெற்று மகிழ்ந்த உதவி
கட்டில்-அரசுக் கட்டில், அரசு உரிமை
வீறுபெற்று- சிறப்புப் பெற்று (வீறு-சிறப்பு)
மறந்த மன்னன் போல- மறந்துவிட்ட மன்னன் போல
நன்றி மறந்து-நன்றியை மறந்து
அமையாய் ஆயின்- வேறுபட்டு நடந்து கொள்ளாமல் இருந்தால்
மென்சீர்க்கலி – மென்மையான அழகுடைய ஒலித்தல் (சீர்-அழகு, கலி-ஒலி)
மயிற் கலாவத்தன்ன- மயிலின் தோகை போன்ற
இவள்- தலைவி
ஒலிமென் கூந்தல்- தழைத்த மென்மை கூந்தல்
உரியவால் நினக்கே-உனக்கே உரிமையுடையன ஆகும்
பாடலின் பொருள்
வீட்டு வாசலில் பெண் யானை தினைப்பயிரைத் தின்று கொண்டிருக்கும்போது, அதன் கன்று தாய் யானையிடம் பால் குடித்துக் கொண்டிருக்கும் பெரிய மலைகளைக் கொண்ட நாட்டை உடையவனே. வறுமையுற்ற காலத்தில் தான் பெற்ற உதவியால் மகிழ்ச்சி அடைந்து, அரசாட்சியைப் பெற்ற பின்னர் நன்றி மறந்த மன்னன்போல வேறுபட்டு நடந்து கொள்ளாமல் இருந்தாய் என்றால், விரைவில் திரும்பி வந்து தலைவியைத் திருமணம் செய்து கொள்வாயானால், மெல்லிய அழகாக ஒலியை உடைய மயிலின் தோகை போன்ற மென்மையாகத் தழைத்து வளர்ந்திருக்கும் தலைவியின் கூந்தல் உனக்கே உரிமையாகும் என்று திருமணத்திற்காகப் பொருள் தேடிச் செல்லும் தலைவனிடம் தோழி கூறியது.
எளிமையான வரிகள்
தினைப்பயிரைத் தின்னும் யானையும்
பால் குடித்து நிற்கும் அதன் குட்டியும்
தன் வீட்டு வாசலில் கட்டியிருக்கும்
பெரிய மலைகள் உடைய நாட்டவனே.
அரசனாக உதவியவர் நன்றி மறந்த
மன்னன் போல மறக்காதே நன்றி,
திரும்பி வந்து மணந்து கொண்டால்
உனக்குரியதாகும் மென்மையான
மயிலிறகு போல் தழைத்திருக்கும்
காத்திருக்கும் அவள் கூந்தல்.
இந்தப்பாடலில், தன் வாழ்வுயர உதவியவர்கள் செய்த உதவியை மறக்கக் கூடாது. அப்படி நன்றி மறந்த மன்னர்களும் அன்றையக் காலத்தில் வாழ்ந்திருக்கிலாம் என்றே புரிந்து கொள்ள முடிகிறது. அது போல வாழ்ந்தவர்களினால்தான் நம் நாடு பல ஆண்டுகளாக அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்துள்ளது. தலைவன் தலைவியைக் காணவும், காதல் கொள்ளவும் பலவாறு உதவிகளைச் செய்தவள் தோழி. அன்பாலும், நட்பாலும் தலைவியோடு அனைத்து நேரங்களிலும் துணை நிற்பவள். எனவே தலைவன் பிரியப் போகிறான் என்ற செய்தியைக் கேட்டதும், முதலில் வருத்தமடைகிறாள். பின்னர் திருமணத்திற்காகப் பொருள் தேடிச் செல்லும் நீ விரைவில் திரும்பி வந்து தலைவியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் இருவரும் இணைந்திருக்க நான் செய்த உதவிகளை மறக்காது, நீண்ட நாட்கள் பிரிவுத்துயரை அளிக்காது திரும்பி வர வேண்டும் என்கிறாள்.
இந்தப் பாடலை எழுதிய கபிலருக்குச் சங்க இலக்கியப்புலவர்களில் தனிச்சிறப்பு உண்டு. நட்பிற்கு வீற்றிருக்கையாக விளங்கியவர். சங்கப் பாடல்களில் அதிகமான பாடல்களைப் பாடிய பெருமையைக் கொண்டவர். மன்னர்கள் அனைவரும் விரும்பும், மதிக்கும் பெரும்புலவர். அனைத்து மன்னர்களுடனும் நெருங்கிப் பழகியவர். ஆகையால்தான், தோழி கூறும் நன்றி மறவாமை எனும் செய்தியை மன்னன் நன்றி மறந்து செயல்பட்டமைக்கு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். பெயர்கள் எதுவும் இடம் பெறாத சங்கப்பாடல்களின் இனிமையில் இது போன்ற மன்னர்கள் ஒளிந்து கொள்கிறார்கள். நன்றி மறந்த மன்னன் யார் என்பது கபிலருக்கும், அந்த மன்னனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று
பூச்சூடுதல் காதலில் இன்பத்தின் நுழைவாயில். தலைவன் காதலோடு பூச்சூடிய கூந்தல் தனக்கே என்ற எண்ணத்தில் இருக்கும் தலைவனின் உள்ளத்தை அறிந்தவள் தோழி. அழகே அழகு… தேவதை ஆயிரம் பாவலர் எழுதும் காவியம், கூந்தல் வண்ணம்மேகம் போலக் குளிர்ந்து நின்றது… என்று பாடி மகிழ்ந்து ரசித்த தலைவியின் கூந்தல் விரைவாகத் திரும்பி வந்து திருமணம் செய்து கொண்டால் உனக்கு உரியதாகும் என்கிறாள். தலைவன் கண்டிப்பாகத் திரும்பி வர வேண்டும் என்பதற்காக அவன் உள்ளம் விரும்பும் செய்தியைச் சொல்கிறாள் தோழி. இப்படிச் சொன்னால் எப்படி வராமல் இருப்பான் தலைவன்…
காதல் வாழ்வில் நிகழும் மாற்றங்களோடு நன்றி மறவாமை மற்றும் அரசியல் இரண்டையும் கலந்து அன்றைய வாழ்வியலைச் சொன்ன தமிழின் பெருமை கபிலர் புகழ் வாழ்க
தொடரும்…
– சித்ரா மகேஷ்
ஓவியம் : உதய பாஸ்கர்
முந்தைய வாரம் :
உன் தோள் சேர்ந்தால்… https://thamizhkkaari.com/?p=854