‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 6
வினையே ஆடவர்க்கு உயிர்” எனும் சொற்களின் வழியாக, ஆண் ஆதிகாலம் தொட்டே தனக்கான கடமையைச் சிறப்பாகச் செய்து வந்திருக்கிறான் என்பதை உணரலாம். குறிப்பாக நிலவுடைமைச் சமுதாயமாக மாறிய பின்னர் ஆணின் கடமையும், பொறுப்புணர்வும் கூடி நின்றது. தன்னால் உருவாக்கப்பட்ட ஒன்றைப் பயனுறச் செய்யும் சூழலில் ஒரு குடும்பத்தின்/ இனத்தின் தலைவன் என்ற நிலையத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கூடுதல் பொறுப்பையும் ஆணே ஏற்றுக் கொண்டான். தான் பங்குபெறும் தொழில், வேலை, பதவி என எதுவாகினும் ஒப்புக் கொண்ட செயலைக் குறித்த நேரத்தில் முடிக்கும் வரை முயற்சியும், உழைப்பும் ஓயாமல் பார்த்துக் கொள்ளும் தனித்திறமை வாய்ந்தவர்கள் ஆண்கள்.
மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும்மேற்கொள்ளார்- செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார். (நீதி நெறி விளக்கம்)
அதாவது உடல் வலி, பசி, இடையூறுகள், இரவு,பகல் பாராது உழைத்தல், இகழ்ச்சிகளைக் கண்டு கலங்காதிருத்தல் என்பவற்றை நெறியாகக் கொண்டு ஒரு செயலை முடிக்கும் வரை உழைக்கும் மனிதர்களைக் கொண்டே இந்த உலகம் இன்றுவரை இயங்கி வருகிறது.
ஆணோ, பெண்ணோ சமுதாயத்தில் தன் வேலையைச் செய்து முடிப்பதற்குள் எத்தனை விதமான இடையூறுகள், அலைக்கழிப்புகள்… அனைத்தையும் தாண்டி இரவு, பகல் என உழைத்துத்தான் தன் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உண்டாக்க வேண்டியுள்ளது. பொருள் சேர்ப்பதற்காக வெளியூர்களுக்கும், கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் குடும்பத்தைவிட்டுச் செல்லும் கட்டாயத்தில் இருக்கிறது இன்றைய பொருளாதாரத் தேவை. அப்படிச் சென்று வாழும் நாட்களில் இரவு, பகல் வேறுபாடுகளினால் பேசக்கூட முடியாத சூழலில் வாழ்வாதாரம் மட்டுமே நோக்கமாகிப் பொருள் தேடி ஓட வேண்டியுள்ளது.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியின் வரலாற்றில் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது கணினி ஆகும். அதன் ஆதிக்கத்தால் ஒரே ஊரில் இருக்கும் கணவன், மனைவி கூட நேரில் பார்த்துக் கொள்ள முடியாத சூழல். வார இறுதி நாட்களைத் தேடித் தவிக்கும் மனநிலையுடனும், அந்த இரண்டு நாட்களின் மீது கொண்ட நம்பிக்கையிலும்தான் வார நாட்கள் நகருகின்றன. எந்தத்துறையில் வேலை பார்ப்பவர் என்றாலும் அந்த வேலை முடிந்தவுடன், முதலில் கண்முன் நிற்பது தன் குடும்பமே. அதுவே காதலர்களுக்கு என்றால் இரட்டிப்பு மகிழ்ச்சியாய்த்தான் இருக்கும் அந்த நேரம். சொல்லிட்டு நிரப்ப முடியாத மகிழ்ச்சியுடன் இருப்பவர்களுக்குக் காற்று கப்பலாகும், எண்ணங்கள் வண்ணங்களாகும். நேற்றைகள் மறந்துபோய் உள்ளம் “உன்னவிட உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்ல” என்று பாடிக்கொண்டே காதலை நிரப்பிக் காதலியைத்/காதலனைத் தேடிச் செல்லும்.
அப்படித்தான் தான் ஏற்றுக் கொண்ட வேலையைச் செய்து முடித்தபின்னர் தலைவனுக்கு, உடனே நினைவுக்கு வந்தது தலைவியும் அவளோடு அவனிருந்த இன்ப நாட்களும். உன்னோடு நானிருந்த ஒவ்வோர் மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே (கவிப்பேரரசு வைரமுத்து) என்று தொடங்கி மனம் இந்த நொடியே அவளிடம் செல்ல வேண்டும் என்று தலைவனின் உள்ளம் துடிக்கிறது. தனது தேர்ப்பாகனிடம் தலைவியிடம் விரைவாகத் தேரை ஓட்டித் செல்லுமாறு கூறியதை இக்குறுந்தொகைப் பாடலில் பதடி வைகலார் எழுதியுள்ளார்.
குறுந்தொகைப் பாடல்
எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத்து எழும்சுவர் நலிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுனைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோள் இணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழும் நாளே. (323)
முல்லைத்திணை
தலைவன் கூற்று – தான் சென்ற செயல் முடிந்ததும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம், தலைவியைப் பிரிந்திருக்கும் நாள்கள் பயனற்றவை. அவை எனக்கு நல்லவை அல்ல. தேரை வேகமாக ஓட்டிச் செல், இப்பொழுதே நான் அவளைக் காண வேண்டும் எனச் சொல்லியது.
பாடியவர் – பதடி வைகலார்
(பதடி வைகல் என்று கருத்தினைப் பாடலில் வைத்து எழுதியதால் இப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்)
அருஞ்சொற்பொருள்
பாணர்– பாணர்கள் – பாட்டுப்பாடிப் பரிசு பெறுபவர்கள்
படுமலை பண்ணிய – படுமலை என்னும் பண்ணைக் கொண்டு வாசித்த
(துத்தம், குரல் கொண்டு பாடப்படுவது, 12 பாலைப் பண்களுள் ஒன்று.)
எழாலின் – இசை
வானத்து – வானத்தில்
எழும்சுவர் – எழுகின்ற/ கேட்கின்ற (சுவல்- மேலிடம்)
நலிசை வீழப்- பெரும் ஒலியைப் போன்ற இசை ஒலி உண்டாக
பெய்த புலத்துப்- மழை பெய்த நிலத்தில்
பூத்த முல்லைப் – பூத்த முல்லைச் செடியில்
பசுமுகைத் – பச்சை நிறத்தில் அரும்பி நிற்கும்
தாது நாறும் – பூந்தாதுவின் நறுமணம் போன்ற (நாற்றம் – மணம்)
நறுநுதல்- நறுமணம் வீசுகின்ற நெற்றியுடைய
அரிவை – அழகிய தலைவியின்
தோள் – தோள்களில்
இணைத் துஞ்சிக் – சேர்ந்து உறங்கி
கழிந்த- கழித்த / சென்ற
நாள்- நாட்கள்
இவண் வாழும் நாளே – இந்த உலகத்தில் வாழ்ந்த நாட்களாகும்
எல்லாம்- மற்றவை எல்லாம்
எவனோ- எந்தப் பயனும் தராத
பதடி – பதர் போன்ற பயனில்லாத கருக்காயை ஒத்த. (கருக்காய் – பிஞ்சு, பழுக்காத,)
வைகல் – நாட்கள்,
பாடலின் பொருள்
பாலைப் பண்களுள் ஒன்றான படுமலைப் பண்ணினை இசையாகப் பாணர்கள் வாசித்தனர். அது வானத்தில் எழும் பெரிய ஒசையைப் போன்று காதில் விழ, மழை பெய்த நிலத்தில் மலர்ந்து நிற்கும் முல்லைச்செடியில் பூக்கவிருக்கும் (மொட்டு) பச்சைநிற அரும்பின் பூந்தாது போன்று மணம் வீசும் நெற்றியை உடையவள் தலைவி. அவளது தோள்களில் சேர்ந்து இன்புற்று உறங்கிக் கழிந்த நாட்கள் மட்டுமே நான் இந்த உலகத்தில் வாழும் நாட்கள். அப்படி அவளோடு சேர்ந்து வாழாது பிரிந்திருக்கும் நாட்கள் எந்தப் பயனுமில்லாத பதர் போன்று, பயனற்ற கருக்காயைப் போன்றவை.
எளிமையான வரிகள்
வானத்துப் பேரோலியாய் மண்ணதிரப்
பாணர் பாடும் படுமலைப் பாட்டு மயக்கும்,
மழை அணைத்த நிலமங்கை பெற்றெடுத்த
மலராக நிற்குமந்த முல்லை அரும்பின்,
மணம் வீசும் அழகுடைய நெற்றியினாள்
தோள் சேர்ந்து வாழுமந்த நாள் தவிர
வேறேதும் நாளல்ல என் வாழ்வில்…
அவளின்றி வாழ்கின்ற நாளெல்லாம்
உயிரின்றி உடல்போல வலித்திருக்கும்…
அவளன்றி நானிருக்கும் நாளெல்லாம்
பயனற்ற கருக்காயாய் கழிந்திருக்கும்.
அன்றிலிருந்து இன்றுவரை காதல், காதல் பற்றிய உணர்வுகள் மாற்றமின்றி அப்படியே இருக்கின்றன என்பதை இந்தப்பாடலும் உணர்த்துகிறது. காதலியின் பிரிவில் உணவு, உறக்கம் இல்லாமை, வெறுப்பு,வலி எனப் பல்வேறு உணர்ச்சிகளைக் கூறுவது போலவே, தன் வேலை முடிந்ததும் தலைவியின் நினைவும், அவளைக் காண வேண்டும் என்ற எண்ணமும் மட்டுமே தலைவனின் உள்ளத்தில் உறுதியாய் இருப்பதை இப்பாடல் கூறுகிறது. அந்த உறுதிக்காகத் தலைவி “சகலகலா வல்லவனே, சலவை செய்த சந்திரனே” என்று வரவேற்றுப் பாடுவாள். இது போலவே பிரிவினால் அன்பு கூடும் என்றால் அந்தப் பிரிவும் சிறிது தேவைதான் காதலில்…இல்லையா? அப்படிப் பிரிந்த காதலன்/ காதலி ஊர் திரும்பும் காலம் வரும்போது இந்தப் பாடலின் தலைவன் போலவே உண்மைக்காதலோடு இருந்தால் காதல் மணக்கும், பிரிவும் இனிக்கும்…
தொடரும்..
– சித்ரா மகேஷ்
ஒவியம் : உதய பாஸ்கர்
முந்தைய வாரம் : https://thamizhkkaari.com/?p=819 – எம் சேரி