வள்ளுவம் படிக்கப் படிக்கவும், தேடித் தேடி உரைகளைப் படித்தும்அறிஞர் பேச்சுக்களைக் கேட்டும்ஒவ்வொரு முறையும் தனித்துவம்கொண்டு புதுமையாகவே நிற்கிறது.
நட்பு, உழவு என்ற வரிசையில் குறிப்பறிதல் என்ற தலைப்பை மட்டும் இருமுறை பயன்படுத்தியுள்ளார். இன்பத்துப்பாலில் இடம்பெற்றதன் விளக்கம் தேவையில்லை.பொருட்பாலில் குறிப்பறிதல் இருப்பதுதான் சிறப்பு.
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்கால் கண்
அல்லது இல்லை பிற. (710)
பொருள்
நுண்மையான அறிவு உடையவரும், பிறருடைய உள்ளத்து உண்மையை அளந்து அறிந்து கொள்ள உதவும் கருவி கண் ஆகும்.
இதை நாம் உணர்ந்திருக்கலாம் அல்லது பிறர் சொல்லக கேட்டிருக்கலாம். உள்ளுணர்வு சொல்லும் என்கிறோமே, அப்படித்தான்.
பார்த்ததுமே நினைச்சேன்,
ஒருதடவை பார்த்தா சொல்லிருவேன்,
கண்ணுல பார்த்தாலே சொல்லிரலாம் …
கண்ணாலயே அளந்துருவா,
இப்படி நிறையக் கேட்டிருப்போம்.
ஒரு உறவின் பயணத்தைத் தீ்ர்மானிப்பதும், முடித்து வைப்பதும் கண்களின் பொறுப்பில் உள்ளது. கண்கள் காதலுக்கு மட்டுமே அணிகலன் எனப் பாடப்பட்டதை மட்டுமே அறிந்த நமக்கு, வள்ளுவன் தந்த இந்தக் குறள் புதுச்சிறப்புச் சேர்க்கிறது கண்களுக்கு…அந்தக் குறிப்பினைத்தான் குறிப்பிடுகிறார் குறிப்பறிதல் அதிகாரத்தில்.
கண்கள் காதலை மட்டுமல்ல
உள்ளத்து உண்மையும் கண்டறியும்
#கண்கள் இரண்டும்
-சித்ரா மகேஷ்