‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 1
நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் செழித்து வளர்ந்த மரங்கள் இன்று வெட்டப்படுகின்றன. நகரங்களில் தொடங்கிய இந்தச் செயல்பாடு, தற்போது கிராமச் சூழலையும் பாழ்படுத்தி வருகிறது. ”மலை வளம் அழிய மழை வளம் குறையும்” என்பதைத் திரைப்படங்கள், குறும்படங்கள், பாடல்கள், குறுஞ்செய்திகள், முகப்புத்தக அறிவிப்புகள், இயற்கை வளம் சார்ந்த தன்னார்வலக் குழுக்கள் எனப் பல்வேறு துறைகள் வலியுறுத்திக் கொண்டே இருக்கின்றன. நமது வாழ்விலிருந்து விடுபட்டுப்போன பழங்கால இலக்கியங்களின் வழி நம் நாட்டின் இயற்கை வளத்தினை அறியமுடிகிறது. எப்படி இருந்த வளநாடு இப்படி ஒரு கெடுவழி நோக்கிப் பயணிப்பதை அறிவுறுத்தும்படியாகச் சங்க இலக்கியப் பாடல்கள் சொல்லும் இயற்கை வளம் பற்றிய குறிப்புகள் அமைந்திருக்கின்றன.
வாழும் காலமும், இனிவரும் காலங்களும் இயற்கை வளம் நிறைந்து அமையுமா? இல்லையா? என்பது சுய ஒழுக்கத்துடனும், சமுதாய அக்கறையுடனும் மனிதன் வாழும் முறையில்தான் உள்ளது. மனிதனால், இயற்கை வன்முறைக்கு உள்ளாகும் பொழுது அதன் எதிர்வினையாகக் கிடைப்பதே வான் பொய்ப்பதும், சுற்றுச்சூழல் சீர்கேடும். இந்தச் சூழலியல் கேடு மாறவேண்டும் எனக் காத்திருப்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. போராட்டங்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் செய்யும் மாற்றங்களைவிட, ஒவ்வொரு மனிதனும் தனக்கான தேவையை, மாற்றத்தை உணர்ந்து நடந்தால் மட்டுமே இயற்கை இன்பத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். குறுந்தொகையின் காதல் பாடல்கள் காதல் வாழ்நிலையைச் சொன்னாலும், காதலோடு இயற்கை வளத்தையும் இணைத்து எழுதப்பட்டு இருப்பது அன்றைய வாழ்வியல் சூழலைக் கண்முன் காட்சிப்படுத்தி நிறுத்துகிறது.
இரவு மற்றும் இருட்டு எனும்போது பயம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைய நகரமயமாக்கப்பட்ட வாழ்வில் இரவு, இருட்டு என்பவை பெயரளவில் மட்டுமே உள்ளது. பகல் என்பது உழைப்பதற்கும், இரவு என்பது ஓய்விற்காகவும் என வகைமைப்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்று இரண்டும் ஒன்றுதான். இன்றைய உலகில் இரவும் பகலும் பெயரைத் தவிரப் பெரிய மாறுதல் இன்றி இயங்கிக் கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்நேரத்தில் தோன்றும் பயம், பதற்றம், இனிமை, தனிமை என ஒவ்வொருவரின் உள்ளநிலைப்பாட்டிற்கு ஏற்ப உணர்வுகளும் தனித்தன்மையோடு விளங்கும். அந்நேரத்தில் கேட்கும் ஒலிகள், உலவும் பூச்சிகள், பறவைகள், விலங்குகள் என நமக்குத் தெரிந்தவையும், தெரியாதவையுமென இரவின் தனிச்சுவைகள் நிறைய உள்ளன. இரவு நேரத்தை அனுபவிக்கக் காரணமாகச் சில சிறப்புகளும் உண்டு என்பதையறியவும் மனிதன் உறங்கச் செல்லும் நேரத்தில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கும் உயிர்களின் வாழ்வை அறிந்திடவும் இரவுக் காதலர்கள் ஆனால் மட்டுமே முடியும்.
இந்தப் பாடலில் உள்ள இயற்கைவளம் பற்றிய செய்திகள் படிப்பவர் உள்ளத்தை, அது எழுதப்பட்ட காலத்திற்கு அழைத்துச் செல்கிறது. போக்குவரத்து, மின்சாரம், பயணத்திற்கானச் சரியான பாதைகள் என எந்தவொரு அடிப்படை வசதியும் இல்லாத காலத்தில் வாழ்ந்த மனிதனின் காதலும், காதலோடு கூடிய வாழ்வும் நமக்குப் பாடலாகக் கிடைத்திருக்கின்றது. அவற்றின்வழி, காதலர்கள் வெளிப்படையாகப் பார்த்து, பழகிப் பேசிடும் வழக்கம் இல்லாத சூழலில் காதலர்கள் இணைந்திட உதவியாக இருந்தது தோழி, இரவு மற்றும் நிலவு. சூழ்நிலை காரணமாகவும், இருவரின் நன்மை கருதியும் சில நேரங்களில் தடையாக இருந்ததும் அவர்களே. அதேபோல் தலைவனிடமும், தலைவியின் தாயிடமும் முன்நின்று தலைவிக்காகப் பேசக்கூடியவளாகத் தோழி இருந்திருக்கிறாள். எந்நேரமும் இருவருக்காகவும் உதவி செய்து அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவள் தோழியாவாள். தோழியைப் பற்றிப் பேசாமல் காதல் வாழ்வையும், காதலர்களையும் எழுத முடியாது. தலைவன் தலைவியுடன் தோழியும் அவர்கள் வாழ்வோடு இணைந்திருந்தமையைப் குறுந்தொகைப் பாடல்கள் வழி உணர முடிகிறது.
எத்தனை தடை வந்தாலும், எந்தப் படையும் இன்றி அதை உடைக்கும் திண்மை உடையது காதல். தலைவியைக் கண்டு, காதல் பேசி, மகிழ்ந்திருக்க வரும் தலைவனுக்கு நிலவின் ஒளி இடையூறாக இருக்கிறது. தலைவியின் ஊரில் அனைவரும் உறங்க, அவன் வருகையை ஊராருக்குக் காட்டிக் கொடுத்துவிடும்படியாக இரவு முழுவதும் நீண்டு ஒளிதரும் நிலவினிடம், நீ காதலுக்கு நல்லது செய்யவில்லை என்று தோழி சொல்வதன் வழி, தலைவியைக் காண வரவேண்டாம் திருமணம் செய்வதுதான் நல்லது எனக் குறிப்பால் தலைவனுக்கு உணர்த்தும் பாடல் இது. காதல், இரவு, நிலவு, கவிதை ஆகியவை அன்று முதல் இன்று வரை இணைந்தே பயணம் செய்து வருபவை. இன்றும் திரைப்படங்களில் பெரும்பாலும் நிலவு பற்றியக் காதல் பாடல்கள் இல்லாமல் இருப்பது இல்லை. நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களும் இல்லை. நிலவைப் பற்றி எழுதாதவர்கள் கவிஞர்களே இல்லை என்றும் சொல்வர். இந்தப் பாடலில் ”நெடுவெண் நிலவு” என்று குறிப்பிட்டுப் பாடியதால், நெடுவெண் நிலவினார் என்று பெயர் பெற்றார் இப்புலவர்.
திரைப்படங்களின் வருகைக்குப் பின்னர், காதல், காதல் பாடல்கள், காட்சிகள் எனக் காதல் சார்ந்த செய்திகளோடு அதில் இடம்பெறும் நடிகர்கள், நடிகைகளும் மக்களின் மனதில் ஆழப்பதிந்து நீங்கா இடம்பெற்றுள்ளனர்.. அதன்வழி காதல் மன்னன், காதல் இளவரசன் எனப் பட்டங்கள் பெற்ற நடிகர்களையும் நாம் அறிவோம். ஆனால், காதல் மொத்தமும் நிறைந்துருகும் ஒரு நடிகனாக அன்றும் இன்றும் என்றும் திரையில் தமிழ் இரசிகர்களைக் குறிப்பாகக் காதலர்களையும், பெண் இரசிகர்களையும் தன்வயப்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன் மற்றும் கமல்ஹாசன். அவர்களது சில திரைப்பாடல்களைக் குறுந்தொகைப் பாடல்களுக்கு அறிமுகமாகப் பொருத்திக் கூறுவதில் காதல் மகிழ்வுறும்.
நிலவுக்கும் நிழலுண்டு… அந்த நிழலுக்கும்… (ஆயிரம் ரூபாய்)
தங்க நிலவில் கெண்டை இரண்டு… (திருமணம்)
காதல் நிலவே கண்மணி ராதா… (ஹெலோ மிஸ்டர் ஜமீன்தார்)
வானிலே தேன் நிலா ஆடுதே பாடுதே… (காக்கி சட்டை)
நீலவான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா… (வாழ்வே மாயம்)
போன்ற பாடல்களில் நிலவு பாடப்பெற்றது போல்தான் இந்தக் குறுந்தொகைப் பாடலிலும் நிலவும், காதலும் சொல்லப்பட்டுள்ளது. காதலைப் போலவே காலங்கள் கடந்தாலும் நிலவுக்கும் காதலுக்குமான தொடர்பு மாறவேயில்லை என்பதை உணர்த்தும்படியான சங்கப்பாடலைக் காண்போம்.
குறுந்தொகைப்பாடல்
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும்புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை
எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை – நெடுவெண் நிலவே. (47)
பாடியவர்: நெடுவெண் நிலவினார்
திணை: குறிஞ்சி
துறை: நிலவிடம் தோழி சொல்லுவது போல் அமைக்கப்பட்ட பாடல், இரவில் காதலியைக் காண வரும் தலைவனிடம் இனிமேல் இப்படி யாருக்கும் தெரியாது வருவது நன்மை தராது எனவே திருமணம் செய்து கொள்வது மட்டுமே சரியான தீர்வு என்பதை உணர்த்தும் பொருள் கொண்ட செய்தியை மறைமுகமாகத் தலைவியைக் காண வந்த தலைவன் கேட்கும்படி தோழி கூறியது.
அருஞ்சொற்பொருள்
கருங்கால் வேங்கை – கரிய நிறக் கால்கள் கொண்ட வேங்கை மரம்
வேங்கை வீஉகு துறுகல் – வேங்கை மலர்கள் விழுகின்ற உருண்டையான கற்பாறை
{வீ- மலர், உகு – உகுத்தல் – உதிர்தல் – விழுதல்,
துறுகல் – உருண்டையான கல், கல் பாறை}
இரும்புலி – பெரிய புலி,
குருளை – குட்டி,
எல்லி – இரவு,
களவு – காதலர்கள் வீட்டிற்குத் தெரியாமல் பழகும் காதல் உறவுக்குப் பெயர் நல்லை- நன்மை/நன்று,
அல்லை –அல்ல.
பாடலின் பொருள்
காதல் கொண்ட தலைவன், இரவு நேரத்தில் தலைவியைக் காண வரும்போது அடர்ந்த காட்டைக் கடந்து வரவேண்டும். வேங்கை மரங்கள் நிறைந்திருக்கும் அக்காட்டில் நிலவின் ஒளி பகல் போல் இருக்கின்றது. அவ்வேங்கை மரத்தின் மஞ்சள் நிற மலர்கள், மரத்தினடியில் இருக்கும் கரிய பாறைகளின் மீது விழுந்து கிடப்பது பெரிய புலிக்குட்டி படுத்திருப்பதுபோல் தோன்றிப் பயமுறுத்தும். அவ்வழியாகப் பல துன்பங்கள் ஏற்படும் என்றாலும், பயமின்றித் தலைவியைக் காண வரும் தலைவனுக்கு இடையூறாக நீண்டு ஒளியைத் தந்து கொண்டிருக்கும் வெண்ணிலவே நீ நன்மை செய்யவில்லை. {நல்லை அல்லை}.
அதாவது, தலைவியைக் காணப்போகும் இன்பத்தை எண்ணித் தலைவன், தனக்கு வரப்போகும் துன்பங்களைப் பொருட்டாக நினைக்காது செல்கின்றான். காட்டின் வழியில் இருக்கும் இடையூறுகளைக் கடந்து, தலைவியைக் காணும் இன்பம் மட்டுமே நோக்கமாக எண்ணிச் செல்வதால், தலைவன் எதற்கும் அஞ்சவில்லை. களவு (காதல்/திருமணத்திற்கு முன்) வாழ்க்கையில் இன்புற்று இருக்கும் காதலர்களைப் பலரும் அறியும்படி காட்டிக் கொடுக்கும் நிலவின் ஒளியில், மஞ்சள் நிற மலர்கள் கரிய பாறையின் மீது விழுந்து பெரிய புலியின் குட்டியைப் போன்று தோற்றம் அளித்து வரும் வழியில் தலைவனைப் பயமுறுத்தும். காதலர்கள் இணைந்திருக்கும் வேளையில் நீண்டநேரம் ஒளிர்ந்து பிறர் கண்டுகொள்ள வழியமைத்து, காதலுக்கு எவ்வழியிலும் உதவிடாத வெண்ணிலவைப் பார்த்துச் சொல்வதுபோல் தலைவனுக்குச் சொல்கிறாள் தோழி, “நீ நல்லை அல்லை” என்று சொல்வது சரிதானே! காதலுக்கு உதவுவதோடு அவர்களின் காதலை நன்றாக அறிந்தவள் தோழி. அதனால்தான் இனிமேல் இதுபோல் யாருக்கும் தெரியாமல் தலைவியைப் பார்க்க வருவது நன்மை பயக்காது, எனவே திருமணம் செய்வது ஒன்றே சரியானது என்ற செய்தியை நிலவிடம் பேசுவதுபோல் தலைவனுக்குக் குறிப்பால் உணர்த்துகிறாள் இப்பாடலில்.
எளிமையான வரிகளில்…
கருங்கால் வேங்கை மரத்தடியில்
மஞ்சள் மலர்கள் போர்த்த பாறை
புலிக்குட்டியாய் வடிவில் மிரட்டும்
காட்டின் வழி, காதல் உள்ளம் நிரப்பிக்
காதலியைக் காண உள்ளம் மலர்த்தி
வரும் தலைவனுக்கு நன்மை செய்யாது
நீண்ட நேரம் விழித்திருக்கும்
வெண் நிலவே நீ நல்லை அல்லை.
காதல் எனும் ஒரு சொல், காலங்கள் கடந்தும் சிறிது கூடத் தன்னிலையிருந்து மாறாமல் உள்ளத்து உணர்வுகளுக்கு உயிரூட்டும் வேலையைச் செய்து கொண்டே இருக்கிறது. காதல், என்ற சொல்லைக் கேட்கும்பொழும், சொல்லும் பொழுதும் ஏற்படும் உணர்வும், உள்ள மகிழ்வும் அனுபவத்தால் மட்டுமே உணரக்கூடிய ஒன்று. சங்க காலக் காதலும், காதலர்களும் போலவேதான் இன்றும் காதலர்களும், அவர்கள் வாழ்வும். காலச்சூழல், வாழ்வியல் சூழல், நாகரீக வளர்ச்சி, கல்வி வளர்ச்சி போன்றவற்றைத் தவிர வேறு எந்தவித மாற்றமும் இல்லாது இனிதே ”காதல்” காதலிக்கப்படுகிறது.
காதல், களவு, தோழி, தூது, மடல் ஏறுதல் என அனைத்தும் இன்றும் காதலில் வேறு பெயர்களில் நடந்து கொண்டுதான் உள்ளது. அன்று இல்லாத ஒன்று, அன்றைய காலத்தில் தொழில் வேறுபாட்டால் காதலுக்கும், காதலர்களுக்கும் ஏற்பட்ட இடையூறுகள் இன்று “சாதி” எனும் பெயரில் நடந்து கொண்டிருப்பதுதான். அதுவும், காலப்போக்கில் அழிந்து போய்விடும் என்ற நம்பிக்கையோடு அதற்கான மாற்றங்களுக்கான விதையாகச் சங்க இலக்கிய அகப்பாடல்களை அறிமுகம் செய்வோம்
தொடரும்..
– சித்ரா மகேஷ்.
ஓவியம் : உதயபாஸ்கர்