Connect with us

Hi, what are you looking for?

சங்க இலக்கியம்

தூங்காதவள் ஆனேன்…

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2

லகில் யாருக்கெல்லாம் கொடுத்து வைத்திருக்கின்றது படுத்ததும் உறக்கம். காலை தொடங்கி மாலை வரை உழைத்துக் களைத்த உடல், பலவித எண்ணங்கள், பார்த்திடாத புதுவித நிகழ்ச்சிகள், இதுவரை பழகிடாச் சந்திப்புகள், பிரச்சினைகள் என அனைத்தையும் மொத்தமாய்த் தூக்கிச் சுமக்கும் உள்ளம், இரவு உறங்கச் சென்றதும் விழித்துக் கொண்டு, கேள்விகள் கேட்கும். பதில் சொல்லும். அறிவுரை வழங்கும். ஆத்திரப்படுத்தும். அமைதியாக்கும். அடங்க மறுக்கும். வணங்கி நிற்கும். வாழ்த்துச் சொல்லும். கெஞ்சும், துக்கப்படுத்தும். தூங்கவிடாது கொஞ்சும், தூங்க மறுத்துக் கொல்லும்.  இப்படி ஒரு நிலையில்தான் தினமும் மனிதனின் பெரும்பாலான இரவுகள் கழிகிறது. குறிப்பாகத் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் ஆதிக்கத்தினால் ஆளப்படும் வாழ்வில் உறக்கத்தைத் தொலைத்து உழன்று கொண்டிருப்பவர்களுடன், உறவுகளினால் ஏற்படும் இடையூறுகள், கருத்து வேறுபாடுகள், பிரிவுகள் போன்றனவும் இணைந்து கொள்வது தனிக்கதை. 

உலகை மறந்து, தன்னிலை மறந்து அனுபவிக்க வேண்டிய உறக்கத்திற்கு முன்னர் இப்படி ஒரு பெரும் உளப்போராட்டத்தை நடத்தி முடித்தபின் எப்படித் தூங்க முடியும். எவ்வழியிலும் எதிர்மறை எண்ணங்களை ஏற்றுக் கொள்ளாது நிறைவான தெளிவான உள்ளத்துடன் வாழும்போது மட்டுமே நிம்மதியாக உறங்க முடியும். அப்படி உறக்கம் வருவது சிலருக்கு மட்டுமே. ஒருவழியாகத் தூங்கினாலும் கனவு வந்து பாடாய்ப்படுத்தும். ஏன்? தூக்கம் வரவில்லையென மருத்துவரிடம் செல்பவர்களும் நிறைய உண்டு. நிற்க… இவையெல்லாம் பொதுவான மனிதர்களுக்குத்தான்… காதல் வந்தவர்களுக்கோ காதல் கைகூடுமா? திருமணம் நடக்குமா? அவன்/ள் வருவாளா? இன்னைக்கு ஏன் வரவில்லை? அப்படி ஏன் நடந்தது? இப்படியிருந்தால் நல்லாயிருக்கும்? எனத் தொடங்கி எண்ணக்கூட்டங்களுக்குள் பெரும்போராட்டம் நடக்கும் நிலையில் காதலர்களுக்குத் தூக்கம் என்பதே எப்பொழுதாவது நடக்கும் ஒன்றாக மாறிப்போகிறது. 

ஆனாலும் உறக்கம் தொலைவதை இன்பமாக அனுபவிப்பது காதலர்கள் மட்டுமே… உறக்கம் தொலையும் இயக்கம் நடத்துபவர்களும் காதலர்களே…. ஊருசனம் தூங்கிடுச்சு ஊதக்காத்தும் அடிச்சிருச்சு பாவிமனம் தூங்கலையே, அதுவும் ஏனோ தெரியலையே” என்ற பாடலை இந்தக் குறுந்தொகைப் பாடலுக்கு மிகப் பொருத்தமாகச் சொல்லலாம். ”தூங்காத கண்ணென்று ஒன்று, துடிக்கின்ற சுகம் என்று ஒன்று” ”தூங்காத விழிகள் ரெண்டு…. உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று” என்று தூக்கத்தைத் தொலைத்துவிட்டுத் தூங்காதது சுகம் என்று அதைப் பாட்டாகப்பாடி மகிழ்வதும் காதலில்தான். தன் காதலை ஏற்க மறுக்கும் தாய், உதவியாய் உடனிருக்கும் தோழி, ஊரில் வாழும் மற்ற அனைவரும் நிம்மதியாக உறங்கும் நடுஇரவில், பொருள் தேடிப் பிரிந்தவன் திரும்பிவரும் நாளை எண்ணிக்கொண்டு உறக்கம் வராதவளாய்த் தவிக்கும் தலைவியின் உள்ள நிலையைக் கூறுகிறது இந்தக் குறுந்தொகைப் பாடல்.   

குறுந்தொகைப் பாடல்

நள் என்று அன்றே யாமம் சொல் அவிந்து
இனிதுஅடங்கினரே மாக்கள், முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்!
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே. (பாடல் -6)

திணை      – நெய்தல்
பாடியவர் – பதுமனார்
தலைவி கூற்று   
துறை /பாடலின் கரு – வரைவிடை வைத்துப்பிரிதல்
திருமணத்திற்குப் பொருள் சேர்க்கும் காரணமாகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்லுதல். 

அருஞ்சொற்பொருள்
நள்ளென்றன்றே   – இருள் கூடிய நடு இரவு நேரம்.
யாமம் –    நள்ளிரவு
சொல் அவிந்து   – சொற்கள் அடங்கியது,பேசுதல் நின்றது
இனிது அடங்கினரே – அமைதியாய் இனிதே உறங்கினர்
மாக்கள் –     தாய், அனைத்து உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்  தன் துன்பத்தை அறியாது இருப்பதால் மாக்கள் (ஐந்தறிவினர்) என்கிறாள் தலைவி முனிவு இன்று – வெறுப்பின்றி
நனந்தலை உலகமும் – அகன்ற இடத்தையுடைய உலகம்
மன்ற       –      உறுதியாக, நிச்சயமாக
துஞ்சும்   –       துயிலும், தூங்கும்
ஓர்யான் – நான் மட்டும்
துஞ்சாதேனே – தூங்காமல் இருக்கின்றேன்.                        

பாடலின் பொருள்
தன்னிலை மறத்தலும், பிரிவில் தகித்தலும், நினைவிலேயே இன்பம் நிகழ்த்தலும் காதல் கொண்டவர்களின் இயல்பு. காதல் ஏற்பட்ட பின்னர் உலகத்துள் உள்ளோரனைத்தும் சுற்றியிருப்பினும் வெற்றிடத்தில் வாழ்வது போல் தோன்றுவதும், மொத்தமாய்ப் பெற்றோர் முதற்கொண்டு வானின்கீழ் உள்ள அவ்வளவும் வேறுபாடின்றி அவளின் வெறுப்புக்கு உள்ளாவதும் காதலில் இயற்கையாக நிகழும் ஒன்று. அந்த வெறுப்பையும், ஆற்றாமையையும் கொண்ட பெண்ணின் கதையே இப்பாடல். திருமணம் செய்யும் பொருட்டுப் பொருள் தேடிச் செல்கிறான் தலைவன். பிரிவினால் உளம்வருந்தித் தவித்திருக்கிறாள் தலைவி. அவளின் காதலை அறிந்து கொண்டதனால், மேலும் வருந்தும்படித் திட்டித் தீர்க்கும் அம்மா, இல்லாத செய்திகளையும் சேர்த்துத் தன் காதலைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் உறவினர்கள், ஊர்மக்கள் ஆகியோர் அவளைப்பற்றிப் பேசுவதையும் நிறுத்திவிட்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கின்றனர். உடனிருந்து ஆறுதல் சொல்லும் தோழியும் மற்றவர்கள்போல் உறங்கிவிட்டதைப் பார்த்த தலைவி, என் வலி எனக்கும் மட்டும்தான் என்று சொல்லுவது போல, அவன் நினைவில் அவள் மட்டும் வருந்திக் கவலை மிகுதியில் உறங்காமல் இருப்பதாகவும், நீ கூட என்னைப் புரிந்து கொள்ளாமல் தனியே புலம்பித் தவிக்கவிடுவது நியாயமா? என்று வருந்துவதாக இப்பாடல் அமைகிறது.  

எளிய வரிகள்

தூங்காதவள் ஆனேன்
உலகம் உறங்கும்
அமைதி உலவும்
நிலவின் இருளில்! 

கண்கள் திரளும்
உள்ளம் புரளும்
காதல் பிரிவில்… 

தலைவன் வரவை
நிதமும் நினைத்து
மனத்துள் வருந்தி 

தனியே நானும்
தூக்கம் துரத்தித்
தூங்காதவளானேன்! 

தூங்காதவள் ஆனேன்

நிலவுலவும் நீலவான நிழலில்
சொல்லயர்ந்து அமைதி தழுவிச்
சோர்வு தீண்ட ஊரார் இமைகள் 
தூக்கம் அணைக்க இணையும்
!காதலவன் பிரிவில் உழன்று
கலங்கி நானொருத்தி மட்டுமிங்கு 
தூக்கம் துரத்தித் தூங்காதவளானேன். 

இன்று ஆணும் பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு அடித்தளமிடும் காதலுக்கு இடையூறாகச் சாதி, மத, இனக் கட்டமைப்புகள் சமூகத்தில் பெரும் அழிவையும், பிரிவினையையும் ஏற்படுத்தி வருகின்றது.  இப்பாடலில் சங்க காலக் காதலர்கள் பிரிந்திருக்கக் காரணம் தொழில் செய்து பொருள் தேடத் தலைவன் செல்வதுதான் என்று கூறப்படுகிறது. இதன் வழியே காதலுக்கும் திருமணத்திற்கும் பொருளாதாரம் தடையாக இருந்திருக்கலாம் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.  

காதல் வாழ்வைக் கடந்து திருமணம் கொள்வதற்காகப் பொருளாதாரத்தை வளப்படுத்த ஆண் செல்வதை இப்பாடல் காட்டுகிறது. அதே பொருளாதாரச் சிக்கல் பெண்ணுக்கும் இருந்திருக்கலாம்.  இன்று, பல சட்டத்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் பெண்ணும், பெண்ணைப் பெற்றோரும் பொருள் சேர்த்தால்தான் திருமணத்தை நடத்த முடிகின்றது. ஒரு பெண் பிறந்ததிலிருந்தே திருமணத்திற்கான பொருளைச் சேர்க்க வேண்டிய கட்டாயநிலையையும் காணமுடிகிறது. இணையாக “ஆணுக்குப் பெண் நிகர்” எனும்படியான மாற்றங்கள் முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருப்பதையும் காணமுடிகிறது. ஆணும், பெண்ணும் பகிர்ந்து கொள்ளும் அன்புநிறை வாழ்வில் இடையூறாகப் பணம், பொருள், இனம், மதம், சாதி, போன்றவற்றின் ஆதிக்கத்தைச் செயலறுத்து, அன்பும் அறனும் இருந்தால் போதும் இல்வாழ்க்கை சிறக்கும் என்பதை யாவரும் உள்ளத்தில் பொருத்தி வாழ்ந்தால் இல்வாழ்வு இனிக்கும். உறக்கம் அணைக்கும், உள்ளம் சிறக்கும். காதல் மணக்கும். கவிதை பிறக்கும். 

தொடரும்… 

– சித்ரா மகேஷ் 

ஓவியம் : உதய பாஸ்கர்

Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

திருக்குறள்

துன்பம் துன்புறும்,வண்டி இழுக்கும் எருதின் விடாமுயற்சி கொள். வழியில் தடைகள் வந்தாலும் முயன்று […]

Advertisement