Connect with us

Hi, what are you looking for?

சங்க இலக்கியம்

பார்த்த முதல் நாளே…

காலங்கள் கடந்த பின்னும் காதலில் மாற்றமில்லை. சங்ககாலத்தில் தொடங்கிப் பல பரிமாணங்களில் பயணப்பட்டு, இன்று திரைப்படங்கள், குறும்படங்கள், நாடகங்கள், கதைகள், வழியாக விதவிதமாகச் சொல்லும் பொழுதும் நமக்குச் சலிப்பதே இல்லை காதலும், காதல் பற்றிய எதுவும், என்றும். காதலெனும் உறவு விதைக்கும் கனவுகளும், உணர்வுகளும் காலம் காலமாய் எந்த வேறுபாடுமின்றி இருப்பதே காதலின் சிறப்பு. 

காதலினால் பிறக்கும் அன்பு, அருள், ஏக்கம், ஊடல், கூடல், செல்லக் கோபம், சிணுங்கல் பிரிவு, காத்திருப்பு, இன்பம், துன்பம் போன்ற உணர்வுகளுக்கு மொழியூட்டும் போது பிறக்கும் கவிதைகள் காலம் கடந்தும் தன்னிலை மாறாது இன்பம் தருபவையாக அமைகின்றன. கவிதை எழுதினாலே என்ன காதலிக்கிறாயா? காதல் கவிதை எழுதுவியா? போன்ற கேள்விகள் எழுவது இயல்பு. காதல் வந்தால்தான் கவிதை வருமா? காதலுக்கும் கவிதைக்குமான உறவுதான் என்ன?  காதல் எப்படித் தோன்றுகிறது?  

ஒருவரை ஒருவர் பார்த்ததும் சிலர் காதல் வயப்படலாம். பிறர் சொல்வதைக் கேட்டுக் கேட்டு உள்ளம் அவர்மீது ஆசை கொள்ளலாம். அழகு, அறிவு இவற்றைத் தாண்டி எதாவது ஒன்று உள்ளம் நுழைந்து உயிரில் கலக்கலாம். என்னமோ தெரியலை, பிடிக்கிறது என்ற வார்த்தை அதிகமாகக் காதலில் சொல்லப்பட்டுவரும் ஒன்று. பல நாட்கள் பழகிய பின்னரும் காதல் வரலாம், பல காலங்கள் வாழ்ந்த பிறகும் காதல் வராமல் கூடப் போகலாம். பார்த்ததும் ஒரு நொடியில் இவன்/ள் தான் நம்மோடு வாழ்நாள் முழுதும் உடன் வரவேண்டும் அல்லது வந்தால்தான் வாழ்வு சிறக்குமென்று தோன்றுமே அந்த எண்ணத்தின் மொழிதான் காதல். இந்தக் காதலைத்தான், அன்றே செம்புலப்பெயனீரார் பாடியுள்ளார்.

ஆண் வேண்டாம் என்பதும், பெண் வேண்டிக் கிடப்பதும் காதலில் பல காலத்தைய உண்மை. சற்றே மாறி பெண் காதலை மறுக்கும்போது, இன்று பெண்ணிற்கு நடக்கும் அவலங்கள் மிகக் கொடூரமானவை. எத்தனை சட்டங்கள் வந்தும், அவை திரும்பத் திரும்பத் திருத்தப்பட்டும் பெண்மேல் செலுத்தப்படும், திணிக்கப்படும் சில கொடுமைகள் மட்டும் மாறாத ஒன்றாகவே உள்ளது. இழப்பும், தவிப்பும் காலம் காலமாகப் பெண்களுக்கானதாகவே உரிமைப்பட்டுக் கிடக்கிறது. பெண்ணுரிமைகள் இன்னும் பேச்சளவில்தான் இருக்கிறது தமிழ்ச்சமூகம். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டுவதுபோல்தான், பெண் உரிமை அல்லது பெண் சுதந்திரம். இருப்பது போல் இருக்கிறது, இல்லாது பெண் உரிமை, இதை உரிமைப்போலியோ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது 

எத்தனையோ போராட்டங்களைக் கடந்து பெண் இன்று அனைத்துத் துறையிலும், முன்னிலையில் இருக்கிறாள். எப்படி இருந்தாலும், வீட்டில், தெருவில், பேருந்தில், அலுவலகத்தில் என்று செல்லும் இடங்களில் எல்லாம் ஆண்களைக் கடந்து செல்லும் சூழலில், யாராவது ஒருவரால் கேடு நடந்துவிடுகிறது. இல்லை நடந்துவிடுமோ என்ற பயத்துடனேதான் பயணிக்க வேண்டி இருக்கிறது. குழந்தை தொடங்கி கிழவி வரை விட்டுவைக்காத சமூகத்தில் தற்காப்பு என்று பெண் நினைப்பது தன் தந்தையை, சகோதரனை, நண்பனை, கணவனை, காதலனை. எனவேதான் அவர்களைப் பிரிய வேண்டும் என்ற நிலையில் பெண் உள்ளம் நடுங்கக் கலங்கிப் போகிறாள். அப்படியொரு பிரிவை எண்ணுதல் கூட மிகுந்த வலிதரக் கூடியதாக உணர்கிறாள்.

இந்தப் பாடலில் பிரிவை எண்ணி ஏங்குபவளாக, பிரிவை ஏற்க முடியாதவளாகித் தவிப்பவளின் வாடிய முகம் கண்டு பதறிய காதலனுக்கு அவள்மேல் காதல் கூடுகிறது. அவளருகில் அமர்ந்து அவள் முகத்தைக் காதலோடு நிமிர்த்த, அவள் கண்களில் தெரிந்த பரிதவிப்பைப் பார்த்து உள்ளம் வருந்தி, ஆறுதல் கூறிப் பேசுவதாகக் குறிஞ்சித் திணையில் செம்புலப்பெயனீராரின் பாடல் தலைவனின் கூற்றாய் அமைந்துள்ளது. செம்புலப் பெயல்நீரை உவமையாக வைத்துப் பாடியதால் செம்புலப்பெயனீரார் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். 

குறுந்தொகைப் பாடல்

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே. [பாடல்-40]

பாடியவர் – செம்புலப்பெயனீரார்
திணை – குறிஞ்சி
துறை – இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர் ”தலைவன் பிரிந்துவிடுவானோ” எனக் கருதி அஞ்சிய தலைமகளின் முகம் மாறுபட்டதைக் கண்டு தலைவன் கூறியது.

அருஞ்சொற்பொருள்

யாயும் – என் தாயும்
ஞாயும் – உன் தாயும் 
யார் ஆகியர் – ஒருவருக்கு ஒருவர் என்ன உறவு முறையினர்
எந்தையும் – என் தந்தையையும் 
நுந்தை – உன் தந்தையையும்
எம்முறை –எந்த முறையில்
கேளீர் – உறவினர்
யானும் – நானும்
நீயும் – நீயும்
எவ்வழி அறிதும் – இருவரும் எப்படி அறிந்தோம்
செம்புலம் -செம்மண் நிலத்தில்
பெயல் நீர் போல – பெய்த மழை நீர் போல
அன்புடை நெஞ்சம் – அன்பு கொண்ட நம் நெஞ்சம்தாம் கலந்தனவே – தானாகவே ஒன்றாகியது

”பார்த்த முதல் நாளே, உன்னைப் பார்த்த முதல் நாளே” என்று தொடங்குகிறது இந்தப் பாடலின் கதை. கண்ட முதல் நாள், முதல் பார்வை, பார்த்த நொடியில் காதல் கொண்ட இருவரிடையே நடக்கிறது ஒரு உணர்வுப் போராட்டம்.  அந்தப் போராட்டத்தின் வெற்றிக்குப் பெயர்தான் காதல்.  இருவருக்கும் எந்த உறவும் இல்லை, ஊரும் தெரியாது. ஆனால் காதல் கொண்ட பின்னர் பலமுறை பார்த்துப் பழகி, பிரிய முடியா உள்ளத்தினர் ஆகினர். உள்ளம் நிறைந்து இருக்கிறான் காதலன், அவன் நினைவிலேயே அவள். காதல் இன்பத்தில் மூழ்கித் திளைத்திருக்கும் நேரத்தில், பிரிந்துவிடுவானோ என்ற பரிதவிப்பு காதலிக்கு. அத்தவிப்பினை உணர்ந்த காதலன் பேசும் காதல்மொழியாக அமைந்ததே இந்தப்பாடல்.

Advertisement. Scroll to continue reading.

என் அம்மா, உன் அம்மா இருவரும் எந்த வழியிலும் உறவும் இல்லை, நட்பும் இல்லை. அதுபோலவே உன் தந்தையும், என் தந்தையும் உறவினரோ, நண்பர்களோ இல்லை. ஏன்? நீயும் நானும் கூட முன்பின் அறிமுகமில்லாதவர்கள். இப்பொழுது தவிர என்றும் பார்த்திராரதவர்கள். செம்மண் நிலத்தில் விழுந்த மழைநீர் தன் இயல்புத் தன்மையை மாற்றிக் கொண்டு அந்நிலத்துடன் கலந்துவிடுகிறது. அதுபோல் அந்நிலமும் மழை நீரினைத் தன்னுள் கொண்டு ஒன்றெனக் கலந்துவிடுகிறது. அவ்வாறே, ஒருவரையொருவர் அறிந்த/கண்டது முதல் இருவரின் உள்ளங்களும் காதலினால் ஒன்றானது. எவ்வழியிலும் அறிந்திராத நம்முள் உண்டான காதல் நிலையானது. நமக்குள் என்றும் பிரிவென்பதே கிடையாது எனச் சொல்லிப் பிரிவையெண்ணி வாடி நின்ற தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக இக்குறுந்தொகைப் பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

எளிமையான வரிகளில்

அறிமுகமில்லாத
நம்மின் அம்மா!
அறிந்திட உறவிலா 
நம்மின் அப்பா!
உறவென்றும் முன் இல்லை,
உறவின் வழி புரியவில்லை!

நீலவானின் மழைத்துளி 
செம்மண் நிலமணைத்து 
ஓரியல்பானது போல்,
உனை அறியா நானும்,
எனை அறியா நீயும்
காதல் நெஞ்சொன்றாய்க்
கலந்து ஒருவரானோம்
பார்த்த முதல் நாளே 
நானும் நீயும் நாமாயானோம்.

விண்ணில் இருந்து விழும் மழைத்துளி செம்மண்ணில் சேர்ந்தபின்னர் பிரிக்க முடியாதபடி மாறிவிடுவதுபோல் நாமும் கண்ட நொடியிலேயே காதல் கொண்டு, ஓருயிர் ஈருடல் என்றானோம். நாம் இருவர் அல்ல ஒருவர். வானுக்கும், மண்ணுக்கும் இடையில் உள்ள தொலைவைப்போல் இல்லை நம் உறவு, என்ன முயன்றாலும் இணைந்திட முடியாத தூரம் அது.  இருப்பினும் வானின் மழை மண்ணோடு ஒன்றெனக் கலப்பதுபோல் நம் உள்ளங்கள் இணைந்து, உடல் இரண்டாய் உயிர் ஒன்றென வாழவிருக்கும் நமக்கு இனிப் பிரிவென்பது இல்லை என்று ஆறுதல் பேசிக் காதலியின் கவலையைப் போக்கி மகிழ்வூட்டுகிறான் காதலன்.  இவர்களைப் போல் வாழ்ந்தால் காதல் வாழும். காதலர்களும் வாழ்வார்கள். வாழவைக்கும் காதலுக்கு…. வாலிபத்தின் பாடலுக்கும் ….அதே தான்.

தொடரும்..

 – சித்ரா மகேஷ் 

ஓவியம் : உதய பாஸ்கர்



Advertisement

Trending

சங்க இலக்கியம்

திருக்குறள்

You May Also Like

கவிதைகள்

அம்மா வெறும் சொல்லல்ல. நாள்களில் என்ன இருக்கின்றதுஅம்மாவைக் கொண்டாட. எந்நாளும் தன்னலம் பார்க்காததிண்மையின் […]

சங்க இலக்கியம்

   ‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 2 உலகில் யாருக்கெல்லாம் கொடுத்து […]

திருக்குறள்

மதியாதவர் உதவியில் உயிர் வாழ்வதைவிட இறப்பதே நன்று. தன்னை மரியாதை இல்லாமல் நடத்துபவர் […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 3 சுற்றியிருக்கும் உறவுகளோடுதான் மனிதவாழ்வின் அன்றாட […]

சங்க இலக்கியம்

நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்று அறிந்தார் ஏத்தும் கலியொடு […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ –   காதல் 1 நீண்டவழிப் பயணத்திற்காக வழி நெடுகச் […]

திருக்குறள்

கனவிலும் துன்பம் தரும்சொல் வேறு செயல் வேறுஉடையவர் நட்பு. கனவில் கூடத் துன்பம் […]

திருக்குறள்

கேலி பேச வேண்டாம் தோற்றம் குறை அல்ல தேரின் அச்சாணி சிறிது. பெரிய […]

சங்க இலக்கியம்

‘சங்கம் மொழிந்த காதல்’ – காதல் 5 மனிதனின் கண்டுபிடிப்புகளில் சிறந்த ஒன்று […]

Advertisement