நூல்களை விலை கொடுத்து வாங்கிப் படிப்பதுதான் என் வழக்கம். கடன் வாங்கிப் படித்தாலும் மறக்காமல் எப்படியாவது திரும்பக் கொடுத்து விடுவதும் அதில் அடக்கம். ஆனால், வடிவரசு தந்த வாய்ப்பு என்னால் என்றுமே தீர்க்க முடியாத கடன் வாழ்வில்.
எப்படி முகநூல் அறிமும் என்று தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகள் கண்ணில் படுகின்ற போதெல்லாம் அட நல்லாருக்கே என்று சொல்லி லைக் போட வைத்தது. அதிலும் தலைப்புக்கான சொற்கள் ஆச்சர்யம் தந்தது.
ஐயா நூல் பற்றிப் பார்த்தேன். நூல் வாங்கிப்பின் படித்திடக் காலமானது. அப்படியே நாள்கள் கடந்து போனது. ஒரு PDF அனுப்பட்டுமா? என்று கேட்டதும், ஒருவித தயக்கம் நிறைந்த மனநிலையோடு சரியென்றேன். உடனே அனுப்பினார். சில தடைகள் இருந்தாலும் கிடைத்த நேரத்தில் இரண்டு நாள்களில் படித்து முடித்துவிட்டேன்.
என்ன சொல்வது வடிவரசுவிற்கு? இப்படி ஒரு வாழ்வைக் கண்முன், அதுவும் அவர் வாழும் காலத்திலேயே பதிவு செய்யதவனை என்ன சொல்லிப் பாராட்டுவது? வள்ளுவன் சொன்னது மகன் தந்தைக்காற்றும், தந்தை மகற்காற்றும் எனும் குறள்களில் கருத்து முரண்பட்டாலும் இவர்களுக்குப் பொருந்துவதை, பொருத்திப் பார்ப்பதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
ஆம், “ஐயா” நூல் மிக எளிமையான படைப்பு, அதைவிட மிக எதார்த்தமான ஒன்று. இப்படி அய்யாக்களால் இயங்குவதுதான் பலரின் வாழ்க்கை. வடிவரசுவுடைய ஐயாவின் பேரன்பும், பண்பும் தனித்துவம் பெறுகின்றது மகனின் எழுத்தில்.
வெள்ளந்தி மனசுக்காரனாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஐயா,
சிறுவயது நினைவுகளைத் தட்டி எழுப்பிவிட்டார். மகனுக்காகக் குடிப்பழக்கத்தை விட்டதில் நிற்கின்றார் மனிதருள் மாணிக்கமாய். ஒவ்வொரு கிராமத்திலும் ஐயாக்கள் இருப்பதினால்தான் வடிவரசு போன்ற மகன்கள் எழுத்துலகிற்குக் கிடைத்துள்ளனர்.
ஐயாவைப் பற்றிய அத்தனைச் செய்திகளும் எங்கோ பிறந்து வளர்ந்த கிராமத்துக்காரியான என் அய்யாவைக் கண்முன் நிறுத்தத் தவறவில்லை. எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்திருக்கலாம், ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று தன் பிள்ளைகளுக்கு வழி சமைத்த ஐயாவின் வாழ்நாள்கள் வடிவரசுவின் வாழ்விற்கு உரமிடும் என்பது உறுதி.
படிக்கும் அனைவருக்கும் , அட நம்ம தாத்தா இது மாதிரித்தானே பண்ணினாரு, நம்ம அய்யா இப்படித்தானே பேசுவாருன்னு தோணும். அப்படித் தோணலை என்றால்… நீங்க உங்க அய்யாவையும், தாத்தாவையும் வாழ்க்கைல மிஸ் பண்ணிட்டீங்கன்னு புரிஞ்சுக்க வேண்டியதுதான். அப்படி மிஸ் பண்ணின அனைவரும் மிஸ் பண்ணாம படிக்க வேண்டியது வடிவரசுவின் “ஐயா”
எனக்குப் பிடித்த ஐயா கள்ளம் கபடமற்ற வெள்ளச்சோளம்.
100 ஆவது பிறந்த நாளுக்கு வாழ்த்திடக் காத்திருக்கின்றேன்.
வாழ்த்துகள் ஐயாவின் வடிவரசு
– சித்ரா மகேஷ்