இந்த முறையும் தமிழ்நாடு் வந்ததற்குக் கிடைத்த ஆகச்சிறந்த பரிசு என நான் கொண்டாடி மகிழக் கிடைத்தது வேல ராமமூர்த்தி அவர்களின் “அரியநாச்சி”.
பெண்களின் திண்மையையும், பெண்மையெனும் ஆழ்நிலையை உரக்கச் சொல்லும் படைப்பு.ஆண்டுகள் கடந்தும் தாய்வழிச் சமுதாயத்தின் ஆதிஆளுமையை மாற்றி அமைத்து, இன்றைய சமுதாயத்தில் முற்றிலும் வேறுபட்ட வாழ்நிலைக்குப் பெண்ணினம் தள்ளப்பட்ட சூழலில் இப்படி ஒரு கதை. பெண்களைச் சுற்றி, பெண்களுக்கு நிகழ்த்தப்பட்டவற்றைக் கொண்டு அமைத்திருக்கும் அரியநாச்சி என்பவள் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய சிறந்ததொரு படைப்பு.
வள்ளி அத்தையைப் போலவே நினைத்தவர் தன்னை மணமுடிக்காததால் இன்றும் தனியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும் எங்க…. —-. மயானம் காட்சியில் சொல்லப்பட்ட வள்ளி அத்தையின் வலி இன்னும் வலிக்கிறது.
மாயழகி – பெயரைப்போலவே கதை முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டவள்.
குடும்பம் கலக்கிக் குமராயி -ஆசைகளை திறமையாய்ச் செயல்படுத்தும் நுட்பமதி கொண்டவள்.
பூவாயிக் கிழவி – கிராமங்களில் மட்டுமே இன்றும் வாழும் பெறாத தாய்கள்.
அரியநாச்சி- ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் இருக்கும் அறிந்து கொள்ளப்படாத ஒரு சிறப்பு.
இத்தனை பெண்களின் வாழ்நிலையைத் தீர்மானிப்பது ஆண்களாக இருந்தும், மொத்தப் பேர்களின் கதையையும், தங்களின் வாழ்க்கையையும் மாற்றி அமைத்தது, முடித்து வைத்தது பெண்கள் என்பதில் அறியப்படாத கதையாக அரியநாச்சி என்றும் நிற்பாள் ஆழ்மனதில்.
-சித்ரா மகேஷ்